மூன்று மாதங்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது.
இந்நிலையில், கடந்த ஜூலை 3 ஆம் தேதி முதல் டி-20 போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய அழைத்தார். ஆரம்ப முதலே நன்றாக விளையாடிய இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து அணி 159 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் குல்தீப் யாதவ் மிக அபாரமாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.
அடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி, ராகுலின் அதிரடியால் இந்திய அணி 18.2 ஓவரிலே 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இன்று இரவு இரண்டாவது போட்டி சோபியா கார்டன்ஸ், கார்டிஃப் நகரில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை இங்கிலாந்து அணி தோல்வியுற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்திய அணி கடந்த எட்டு டி20 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்று வருகிறது. அந்த வரிசையில் இன்றைய ஆட்டமும் அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த குல்தீப் யாதவ், இன்றும் இங்கிலாந்தை மிரட்டுவார் என எதிர்பார்க்கலாம்.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா சாதனை புரிவாரா என எதிர்பார்க்கப்படுகிறது. விராத் கோலியை அடுத்து, டி-20 போட்டியில் 2000 ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைய இன்னும் 19 ரன்கள் தூரத்தில் உள்ளார் ரோஹித்சர்மா.
இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரண்டு அணிகளும் விளையாடும் பட்சத்தில், இரு அணிகளும் சமநிலை பெறுமா? அல்லது இந்திய அணி தொடரை வெல்லுமா? என ஆவலுடன் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
The boys look all geared up for the 2nd T20I against England.
Will they go up 2-0 today in the three-match T20I series?#ENGvIND pic.twitter.com/I2VwhOWCK6
— BCCI (@BCCI) July 6, 2018
அணிகள் விவரங்கள்:-
இந்தியா: ஷிகார் தவான், ரோகித் சர்மா, கே.எல். ராகுல், விராத் கோலி (C), டோனி, சுரேஷ் ரெய்னா, ஹார்டிக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், யுஜ்வெந்தர சாகல், குல்தீப் யாதவ்.
இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் , ஜேசன் ராய், ஜோ ரூட், அலெக்ஸ் ஹேல்ஸ், மோர்கன் (C), ஜானி பியர்ஸ்டோவ், மோயீன் அலி, அதில் ரஷிட், லியாம் பிளன்கெட் / ஜேக் பால், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டன்.