இலங்கைக்கு எதிரான 3_வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது இந்தியா. இதன்மூலம் 3-வது வெற்றியைப் பெற்றிருக்கும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கண்டியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் லஹிரு திரிமானி அதிகபட்சமாக 105 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்தார். சன்டிமல் 36, சிறிவர்த்தனா 29, கேப்டன் கபுகேதரா 14, டிக்வெல்லா 13, மேத்யூஸ் 11 ரன்கள் எடுக்க, எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்தியத் தரப்பில் பூம்ரா 5 விக்கெட்டுளை வீழ்த்தினார்.
இந்தியா 210 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆத்திரமடைந்த இலங்கை ரசிகர்கள், மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டு, பிறகு மீண்டும் நடைபெற்றது. இறுதியில் இந்திய அணி 45.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் ரோஹித் சர்மா 145 பந்துகளில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 124, தோனி 86 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் தனஞ்ஜெயா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜஸ்பிரித் பூம்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.