டெஸ்ட் போட்டிகளில் இனி ஜெர்ஸி எண் பயன்படுத்தப்படும் எனும் புதிய விதி அமுலுக்கு வந்துள்ள நிலையில், மகேந்திர சிங் தோனியின் 7-ஆம் இந்திய அணி வீரர்கள் யாருக்கு அளிக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது!
டெஸ்ட் போட்டிகளில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிய மாற்றங்கள் கொண்டுவந்துள்ளது. இதன்படி வீரர்கள் தங்களது ஜெர்ஸியில் தங்களது பெயர் மற்றும் எண்ணை பயன்படுத்தலாம்.
டெஸ்ட் போட்டிகளில் இதுவரை வீரர்களின் ஜெர்சியில் அவர்கள் பெயரோ எண்ணோ இருக்காது. டி-20 மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மட்டுமே வீரர்கள் தங்கள் பெயர் மற்றும் எண் இருக்கும் ஜெர்சியை அணிந்து கொள்வர்.
ஆனால் தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபல படுத்தும் விதமாக சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த புதிய டெஸ்ட் ஜெர்சி. இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் டெஸ்ட் ஜெர்சியிலும் அவர்களின் பெயர் மற்றும் அவர்கள் விருப்பப்படும் எண் இருக்கும்.
இந்த புதிய மாற்றம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற உள்ள ஆஷஸ் தொடரில் இருந்து அமலுக்கு வருகிறது. இதனை குறிக்கும் வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான ஜோ ரூட் மற்றும் ஸ்டுவர்ட் ப்ரோட் புதிய டெஸ்ட் ஜெர்சியில் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது.
இதனைத்தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்திய அணி உலகக்கோப்பை சாம்பியன்ஷிப்பின் ஒரு பங்காக மேற்கிந்திய தீவுகள் அணியை சந்திக்க உள்ளது. 3 டி-20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 4-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதில் நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் உலகக்கோப்பை சாமியன்ஷிப்புக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
கடந்த 2014-ஆம் ஆண்டு தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து, தற்போது டெஸ்ட் போட்டிகளில் அவரின் ஜெர்ஸி எண் 7 யார் பயன்படுத்தப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவரின் ஜெர்சி எண் 10-யை ஷர்துல் தாகூர் பயன்படுத்தியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஒரு வீரர் பயன்படுத்திய ஜெர்சி எண்ணை இன்னொருவர் பயன்படுத்த கூடாது என்ற விதிகள் எதுவும் இல்லை. இருந்தபோதிலும் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களின் எண்ணை வேறு யாரும் பயன்படுத்த மாட்டார்கள்.
எனவே தற்போது இதேப்போல் தோனியின் ஜெர்சி எண் 7 -யை யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற வீரர்கள் தங்களது ஒரு நாள் ஜெர்ஸி எண்ணான 18 மற்றும் 45 ஆகிய எண்களையே பயன்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.