India vs Pakistan Match Win Prediction: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி தற்போது குரூப் சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல அதிர்ச்சிகரமான முடிவுகளை போட்டிகளில் காண முடிந்தது. பாகிஸ்தானை வீழ்த்திய அமெரிக்கா, நியூசிலாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான், இலங்கையை வீழ்த்திய வங்கதேசம் என ஒவ்வொரு போட்டியும் பல அணிகளை பதைபதைப்புக்கு ஆளாக்குகிறது. இதனால், ஒவ்வொரு போட்டியும் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.
அந்த வகையில், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ள குரூப்-ஏ சுற்றில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அமெரிக்காவின் நியூயார்க நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (New York Nassau County International Cricket Stadium) இன்று மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பப்படும். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஓடிடியில் ஹாட்ஸ்டார் தளத்திலும் நேரலையில் காணலாம்.
இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு?
இரு அணிகளும் நடப்பு குரூப் சுற்றில் தலா 1 போட்டியில் மட்டும் விளையாடி உள்ளன. அதில் இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தி சற்று நம்பிக்கையுடன் இருந்தாலும், பாகிஸ்தான் அணி கத்துக்குட்டி அணியாக பார்க்கப்பட்ட அமெரிக்காவிடம் மோசமான ஆட்டம் காரணமாக தோல்வியடைந்து மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. இந்த தொடருக்கு முன் இங்கிலாந்தில் அந்த அணி விளையாடிய டி20 தொடரிலும் தோல்வியுற்று பெரும் விமர்சனங்களுக்குள் சிக்கியிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | இன்னும் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதா?
இந்நிலையில், இன்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் (India vs Paksitan) பலரும் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் இந்திய அணியின் பேட்டிங் - பந்துவீச்சு என இரண்டும் பேலன்ஸாக இருப்பதாலும், ஐசிசி தொடர் என்றாலே பாகிஸ்தான் மீது இந்திய அணி எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் என்பதாலும் என கூறலாம். ஆனால், இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு இருக்கும் அதே வாய்ப்பு நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கும் சமமான அளவில் இருப்பதாகவே கூற முடியும்.
மோசமான ஆடுகளம்...
நியூயார்க் ஆடுகளங்கள் அதிகம் வேகப்பந்துவீச்சுக்கே சாதகமாக இருந்துள்ளது. ஆடுகளம் கணிக்க முடியாத வகையிலும், சற்று அபாயகரமானதாகவும் இருப்பதாகவும் இந்திய அணி தரப்பில் கூறப்பட்டு வந்தது. அன்றைய போட்டியிலும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. நேற்று பயிற்சியிலும் கூட கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் புகார் எழுப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து ஐசிசி ஒரு விளக்கத்தையும் அளித்திருந்தது. அதாவது, ஆடுகளத்தை சீராக அமைக்க தொடர்ந்து அவர்கள் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், சூழலை புரிந்துகொண்டு வேகப்பந்துவீச்சு அட்டாக்கை வைத்தே இரு அணிகளும் காம்பினேஷன்களை அமைக்கும் என கூறப்படுகிறது. ஆடுகளத்தில் காணப்படும் எதிர்பாராத கணிக்க இயலாத பவுண்சர்களை இன்று யார் தாக்குப்பிடித்து விக்கெட்டை இழக்காமல் விளையாடுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி எனலாம். இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் தொலைக்காட்சி ஒன்றில் பேசியிருந்தார்.
பாகிஸ்தானுக்கும் சமமான வாய்ப்பு
அதில்,"நான் பாகிஸ்தான் அணி (Team Pakistan) வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புவேன். ஆனால் இந்த தொடரில் இதுவரை நான் பார்த்ததில் இருந்து நியூயார்க்கில் உள்ள ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமானது. எனவே, நியூயார்க்கில் உள்ள ஆடுகளம் காரணமாக போட்டி இரு தரப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக சமன் செய்கிறது
இந்தியாவின் ஃபார்மைப் பார்த்தால், பொதுவாக இந்தியா (India National Cricket Team) ஒரு சிறந்த அணி. டி20 கிரிக்கெட் விரும்பத்தக்க வகையில் சிறந்த அணி. இன்று வெற்றி பெற இந்தியாவுக்கு 60%, பாகிஸ்தானுக்கு 40% வாய்ப்பு இருக்கிறது என்பேன். ஆனால், இது டி20 போட்டி. ஒரு நல்ல பேட்டிங் இன்னிங்ஸ், ஒரு நல்ல பந்துவீச்சு ஸ்பெல், ஆட்டம் விரைவாக மாறலாம். தொடரின் இந்த ஆட்டத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்" என்றார். வேகப்பந்துவீச்சில் இந்திய அணியில் (Team India) பும்ரா, அர்ஷ்தீப் சிங், சிராஜ், ஹர்திக் பாண்டியா ஆகியோரை வைத்திருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தான் அணி முகமது ஆமிர், ஷாகின் அப்ரிடி, ஹரீஸ் ராஃவுப், நசீம் ஷா ஆகியோரை வைத்துள்ளது. எனவே, பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு சற்று பலமானதாக காணப்படுகிறது.
மேலும் படிக்க | சிவம் துபேவிற்கு பதில் சஞ்சு சாம்சன்? இந்திய அணியில் மாற்றம் செய்துள்ள ரோஹித்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ