3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டும் இழந்து 451 ரன்கள் எடுத்துள்ளது
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதையடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 16-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரென்ஷா, வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 50 ரன்கள் இருக்கும் போது ஆஸ்திரேலியா தனது முதல் விக்கெட்டை இழந்தது. வார்னர் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் ஸ்மித் களம் இறங்கினார். அடுத்தடுத்து விக்கெட் விழ 5-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். முதல் நாளில் ஸ்மித் சிறப்பாக விளையாடி 244 பந்தில் சதம் அடித்தார். மறுமுனையில் மேக்ஸ்வெல் நன்றாக விளையாடி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும் சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் சதம் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மேக்ஸ்வெல் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். 104 ரன்கள் அடித்த மேக்ஸ்வெல் ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். கடைசி வரை நிலைத்து நின்று விளையாடிய ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் ஆட்டம் இழக்காமல் 178 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட் இழந்து தனது முதல் இன்னிங்ஸில் 451 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
Innings break! Australia all out for 451. #INDvAUS pic.twitter.com/2eIEJqj6kM
— BCCI (@BCCI) March 17, 2017