இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
#INDvsAUS: India win the first ODI against Australia by 6 wickets in Hyderabad; take 1-0 lead in 5-match series pic.twitter.com/NahS9G8a3C
— ANI (@ANI) March 2, 2019
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், ரன் ஏதும் எடுக்காமல் 2வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார்.
அதன் பின்னர் உஸ்மான் கவாஜாவுடன் ஸ்டாய்னிஸ் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்டாய்னிஸ் 53 பந்துகளில் 37 ரன்களும் உஸ்மான் கவாஜா 76 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து சீரான இடைவெளியில் வெளியேறினர்.
பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 19 ரன்களும், மேக்ஸ்வெல் 40 ரன்களும், ஆஷ்டன் டர்னர் 21 ரன்களும் எடுத்து வெளியேற ஆஸ்திரேலிய அணி 39.5 ஓவரில் 173 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்து வந்த அலெக்ஸ் காரி, ஜாசன் ஜோடி அணியின் ஸ்கோரை கனிசமாக உயர்த்தியது.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் முகம்மது ஷமி, ஜாஸ்ரிட் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினர். கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
237 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 81 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து இந்திய அணி 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.