India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. குருப் சுற்று போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன. அமெரிக்காவில் நடைபெற இருந்த போட்டிகள் அனைத்தும் இன்னும் சில நாள்களில் முடிந்துவிடும். சூப்பர் 8 சுற்று போட்டிகள் அனைத்தும் மேற்கு இந்திய தீவுகளிலேயே நடைபெற உள்ளன.
தற்போதைய குரூப் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 5 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கான இடத்தை உறுதி செய்துவிட்டன. நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட கத்துக்குட்டி அணிகளுடன் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளும் தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டது.
பாகிஸ்தான் நிலைமை என்ன?
குரூப் ஏ-வில் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு வருகிறதா இல்லையா என்பது இன்று தெரிந்துவிடும். அமெரிக்க அணி அதன் கடைசி குரூப் சுற்று போட்டியில் இன்று அயர்லாந்து உடன் விளையாட உள்ளது. இந்த போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றாலோ அல்லது மழை காரணமாக போட்டி ரத்தாகி இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டாலோ பாகிஸ்தான் அணி வெளியேறிவிடும். அமெரிக்க அணி அயர்லாந்துடன் தோற்றாலும், பாகிஸ்தான் அணி தனது கடைசி போட்டியில் அயர்லாந்திடம் வெற்றி பெற்று, நெட் ரன்ரேட்டும் அமெரிக்காவை விட அதிகம் பெற்றால் மட்டுமே பாகிஸ்தானுக்கு வாய்ப்புள்ளது. அயர்லாந்து அணி இந்த இரண்டு போட்டியில் அதிக நெட் ரன்ரேட்டுடன் வெற்றி பெறும்பட்சத்தில் அந்த அணிக்கும் வாய்ப்புள்ளது.
நடப்பு சாம்பியனின் நிலை...
மறுபுறம், குரூப் பி-இல் இங்கிலாந்து அணிக்கு இன்னும் அதிக வாய்ப்பிருக்கிறது. ஆஸ்திரேலியாவிடம் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணி வெளியேறும். ஏனென்றால் இங்கிலாந்து அணி ஸ்காட்லாந்தை விட மிக அதிகமாக நெட் ரன்ரேட்டை வைத்துள்ளது. தற்போது ஸ்காட்லாந்து 5 புள்ளிகளுடன் இருக்கிறது, இங்கிலாந்து 3 புள்ளிகளுடன் இருக்கிறது. எனவே, ஸ்காட்லாந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்று, இங்கிலாந்து அதன் கடைசி போட்டியில் நமீபியா உடன் வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துவிடலாம்.
சூப்பர் 8 சுற்றில் இந்தியா...
தற்போதைய சூழலில் சூப்பர் சுற்றில் இந்திய அணி விளையாடப்போகும் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் யார் யாருடன் என்று உறுதியாகிவிட்டது. ஜூன் 20ஆம் தேதி இந்திய அணி ஆப்கானிஸ்தானையும், ஜூன் 24ஆம் தேதி ஆஸ்திரேலியாவையும் சந்திக்கிறது. ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி வங்கதேசம், நெதர்லாந்து அல்லது நேபாளம் ஆகிய அணிகளுள் ஒன்றுடன் மோதும் எனலாம்.
நாடு திரும்பும் 2 இந்திய வீரர்கள்
இந்நிலையில், இந்திய அணியின் 15 பேர் ஸ்குவாடில் இல்லாத 4 மாற்று வீரர்களில் (Travelling Reserve Players) இரண்டு பேர் தற்போது நாடு திரும்ப உள்ளனர். இதுபோன்ற பெரிய தொடர்களுக்கு உடனடியான மாற்று வீரர்களுக்காக இதுபோன்று சில வீரர்களை அணிகள் அழைத்துச் செல்லும். அந்த வகையில், நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கு தொடருக்கு இந்திய அணி தரப்பில் சுப்மான் கில், ரின்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகிய நால்வரும் தேர்வாகினர். இதில் ரின்கு சிங் மற்றும் கலீல் அகமது இந்திய அணியுடன் தொடர்ந்து பயணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் மட்டும் தற்போது நாடு திரும்ப உள்ளனர்.
இன்னும் அமெரிக்காவில் இந்திய அணி ஒரே ஒரு போட்டியை மட்டுமே விளையாட உள்ளது. புளோரிடாவில் நாளை நடைபெறும் கனடாவுக்கு எதிரான போட்டிக்கு பின்னர் சூப்பர் 8 சுற்று, நாக்அவுட் சுற்றுகளுக்காக இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு செல்ல உள்ளது. எனவே, இந்திய அணியுடன் மேற்கு இந்திய தீவுகளுக்கு ரின்கு சிங் மற்றும் கலீல் அகமது ஆகியோர் மட்டுமே செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுப்மான் கில் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் நாடு திரும்புவதற்கான காரணம் குறித்து தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ