முதல் டெஸ்ட் முதல் நாளில் சொதப்பிய இந்திய அணி; இன்றும் ஆட்டம் தொடரும்

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 23, 2019, 05:15 PM IST
முதல் டெஸ்ட் முதல் நாளில் சொதப்பிய இந்திய அணி; இன்றும் ஆட்டம் தொடரும் title=

ஆன்டிகுவா: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்க உள்ளது. இந்திய அணி தொடர்ந்து விளையாட உள்ளது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரையும் இந்திய அணி வென்று அசத்தியுள்ளது. 3-0 என்ற கணக்கில் டி20 தொடரும், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டி தொடரையும் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று ஆன்டிகுவாவில் தொடங்கியது. மூத்த மற்றும் அனுபமிக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் இல்லாமல் களம் இறங்கியது இந்திய அணி.

ஆன்டிகுவாவில் மழை பெய்து வருவதால், 15 நிமிடங்கள் தாமதமாக போட்டித் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களம் இறங்கினார்கள். வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சை தாக்கு பிடிக்காமல் மயங்க் அகர்வால் 5 ரன்னிலும், புஜாரா 2 ரன்னிலும், அடுத்த வந்த கேப்டன் விராத் கோலி 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தனர்.

25 ரன்னுக்கு மூன்று விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், கே.எல். ராகுலுடன் இணைந்த துணை கேப்டன் ரஹானே நிதானமாக ஆடி அணியை சற்று சரிவில் இருந்து மீட்னர். 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கே.எல். ராகுல் ஆட்டம் இழந்தார். அதற்கு அடுத்து ஹனுமா விஹாரி 32 ரன்னில் அவுட் ஆனார். 

இந்திய அணி 175 ரன்களுக்கு 5 விக்கெட் இல இழந்த நிலையில், ரஹானேவுடன் இணைந்து ஆடினார் இளம் வீரர் ரிஷாப் பந்த். அரைசதம் அடுத்து நன்றாக ஆடி வந்த ரஹானே 81(163) ரன்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ரிஷாப் மற்றும் ஜடேஜா இணைந்து ஆடி வருகின்றனர். 

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷாப் 20 ரன்னுடனும், ஜடேஜா 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 3 விக்கெட்டும், கேப்ரியல் 2 விக்கெட்டும், சேஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்க உள்ளது. இந்திய அணி தொடர்ந்து விளையாட உள்ளது.

Trending News