Gautam Gambhir Press Conference Latest News Updates: ஆஸ்திரேலியா உடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை (Border Gavaskar Trophy) விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்காக யஷ்ஸ்ஸி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், சர்ஃபராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய வீரர்கள் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.
முதல் டெஸ்ட் தொடர் வரும் நவ. 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்னும் சுமார் 10 நாள்கள் இருக்கும் வேளையில், இன்று இரண்டாவது குழு ஆஸ்திரேலியாவுக்கு பயணப்பட உள்ளது. இந்த குழுவுடன் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பயணிக்க உள்ளார். இந்த குழுவோடு விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட மீதம் இருக்கும் வீரர்கள் புறப்படுகின்றனர். அதே நேரத்தில் கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. அவரின் மனைவி கருவுற்றிருப்பதால் அடுத்த வாரம் குழந்தை பிறக்க இருப்பதாக கூறப்படுகிறது அதை தொடர்ந்து அவர் முதல் போட்டியை தவறவிடுகிறார் என கூறப்படுகிறது.
ரோஹித் சர்மா: விளையாடுவாரா மாட்டாரா...?
இந்நிலையில் இரண்டாவது குழு ஆஸ்திரேலியாவுக்கு புறப்படும் முன்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் (Team India Head Coach Gautam Gambhir) இன்று (நவ. 11) மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரோஹித் சர்மா முதல் டெஸ்டில் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்விக்கு,"தற்போது வரை அது உறுதியாகவில்லை. அவர் விளையாடுவார் என நம்புகிறோம். தகவல் வரும்போது தெரியப்படுத்துகிறோம்" என்றார். அதே நேரத்தில், ரோஹித் சர்மா விளையாடவில்லை என்றால் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் அபிமன்யூ ஈஸ்வரன் அல்லது கேஎல் ராகுல் ஆகியோரில் ஒருவர் ஓப்பனிங்கில் விளையாடுவார்கள் என கம்பீர் தெரிவித்துள்ளார்
மேலும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியா பின்தங்கியிருப்பது குறித்தும், இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "நாங்கள் புள்ளிகள் பட்டியலை பார்ப்பதில்லை. பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் முழுமையாக கவனம் செலுத்தி, தொடரை வெல்ல முயற்சிப்போம்" என பதிலளித்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது குறித்து எழுந்த விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
விமர்சனங்கள் குறித்து கௌதம் கம்பீர்
அதற்கு கம்பீர்,"பயிற்சியாளர் என்பது கௌரவமான வேலை என்பதை தாண்டி மிக கடினமான ஒன்று என்பதை தெரிந்துதான் வந்தேன். எனக்கு ஏதும் அழுத்தம் இல்லை. நாங்கள் மூன்று துறையிலும் (பேட்டிங், பௌலிங், பீல்டிங்) மோசமாக விளையாடினோம். அனைத்து விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்கிறோம். ஆஸ்திரேலியாவில், அந்த தொடருக்கு எவ்வாறு தயாராகிறோம் என்பதுதான் முக்கியம் வரும் 10 நாள்கள் முக்கியமானது, அதன் பலனை முதல் டெஸ்டின் முதல் நாளிலேயே காணலாம்" என்றார்.
ஏன் நிதிஷ்குமார் ரெட்டி?
ரோஹித் மற்றும் விராட்டின் பேட்டிங் ஃபார்ம் குறித்து எவ்வித கவலையும் இல்லை என தெரிவித்த கம்பீர், டிரெஸ்ஸிங் ரூம்மில் ஒரு வெறி இருக்கிறது, அதுதான் முக்கியம் என்றும் கம்பீர் கூறினார். ஆஸ்திரேலிய சூழலில் விளையாடிய பல வீரர்கள் எங்களிடம் உள்ளார்கள் என்றும் அவர்களின் உள்ளீடுகள் இளம் வீரர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்றும் கூறினார். அதேபோல் நிதிஷ்குமார் ரெட்டி குறித்த கேள்விக்கு, "அவர் நல்ல திறனுடைய வீரர், அதுவும் எதிர்காலத்திற்கானவர். எங்களின் சிறந்த வீரர்களை நாங்கள் தேர்வு செய்துள்ளோம்" என்றார். ஷர்துல் சேர்க்கப்படாதது குறித்தும், நிதிஷ்குமார் ரெட்டிக்கு (Nitish Kumar Reddy) அளிக்கப்பட்ட வாய்ப்பு குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு அவர்,"நாங்கள் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளோம். தேவை ஏற்படும்போது, நிதிஷ் குமார் அணிக்கு பங்களிப்பார்" என்றார்.
கேஎல் ராகுலின் ரோல்...
அதேபோல் கேஎல் ராகுலின் (KL Rahul) பணி அணியில் என்னவாக இருக்கிறது என்பது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கம்பீர்,"கேஎல் ராகுல் ஓப்பனிங்கும் விளையாடக்கூடியவர், 3ஆவது இடத்திலும் இறங்குவார், 6ஆவது இடத்திலும் இறங்குவார், ஒருநாள் தொடர்களில் விக்கெட் கீப்பிங் செய்திருக்கிறார். இப்படி ஒரு வீரர் ஒரு அணிக்கு கிடைப்பது அபூர்வம். கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் எத்தனை அணிகளில் இருக்கிறார்கள் சொல்லுங்கள்..." என்றார். ரோஹித் சர்மா இல்லாதபட்சத்தில் துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்துவார் என்றும் அவர் கூறினார்.
ரிக்கி பாண்டிங்கிற்கு பதிலடி
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) விராட் கோலியின் ஃபார்ம் குறித்து முன்வைத்த விமர்சனத்தை சுட்டிக்காட்டி கௌதம் கம்பீரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,"இந்திய கிரிக்கெட்டுக்கும் ரிக்கி பாண்டிங்கிற்கும் என்ன சம்பந்தம்? அவர் ஆஸ்திரேலிய அணி குறித்து மட்டும் சிந்திக்கட்டும்" என்றார். முன்னதாக ரிக்கி பாண்டிங் விராட் கோலி (Virat Kohli) போல் கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு சதம் அடித்திருந்தால், வேறு வீரர்கள் யாரும் இந்திய அணியில் இருந்திருக்க மாட்டார்கள் என விமர்சித்திருந்தார். அதற்கு கம்பீர் தற்போது பதிலடி கொடுத்தார்.
இந்தியாவின் வேகப்பந்துவீச்சு படை
இந்திய டெஸ்ட் அணி தற்போது உருமாற்றம் ஆகிவருவது குறித்த கேள்விக்கு,"உண்மையாக, இந்திய அணி உருமாறி வருகிறது என எனக்கு தோன்றவில்லை. இன்னும் இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்திய அணிக்கு பஙகளித்தவர்கள், இளம் வீரர்கள் இந்திய அணிக்கு எதிர்காலத்தில் பங்களிப்பார்கள். உருமாற்றம் அல்லது உருமாற்றம் இல்லாதது ஆகியவை தொடர்ந்து இந்திய அணியில் இருந்து கொண்டேதான் இருக்கும். ஆஸ்திரேலியா எந்தவிதமான ஆடுகளத்தை கொடுத்தாலும் அதை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும் கம்பீர் தெரிவித்தார்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கான வேலை-பளூ மேலாண்மை குறித்தும் அவர்களை எப்படி கையாளப்போகிறீர்கள் என்பது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கம்பீர்,"எங்களிடம் தரம் இருக்கிறது. ஆடுகளத்தில் நன்கு வேகமாக போடக்கூடிய பிரசித் கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற உயரமான வீரர்கள் இருக்கின்றனர். வெவ்வேறு திறன் கொண்ட 5 வேகப்பந்துவீச்சாளர்களை வைத்திருக்கிறோம். அதனாலேயே நமது வேகப்பந்துவீச்சு தாக்குதல் மிகவும் அச்சுறுத்தல் அளிக்கும் விதத்தில் இருக்கிறது" என்றார்.
மேலும் படிக்க | இஷான் கிஷனுக்கு பதில் இந்த சிஎஸ்கே வீரரை டார்கெட் செய்யும் மும்பை அணி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ