’நானும் ஓய்வு பெறுகிறேன்’ அடுத்தடுத்து ஓய்வை அறிவிக்கும் இங்கிலாந்து வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் திடீரென அறிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 4, 2023, 08:38 PM IST
  • ஓய்வை அறிவித்த அலெக்ஸ் ஹேல்ஸ்
  • இந்தியாவுக்கு எதிராக அறிமுகம்
  • பாகிஸ்தான் போட்டி கடைசி
’நானும் ஓய்வு பெறுகிறேன்’ அடுத்தடுத்து ஓய்வை அறிவிக்கும் இங்கிலாந்து வீரர்கள் title=

ஆஷஸ் தொடருக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் இருந்து மூத்த வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்து வருகின்றனர். ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், அந்த அணியில் விளையாடிய மற்றொரு வீரரான மொயீன் அலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர்களின் அறிவிப்பை தொடர்ந்து மற்றொரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான அலெக்ஸ் ஹேல்ஸூம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும் நிலையில், இங்கிலாந்து அணியில் இருந்து மூத்த வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வை அறிவிப்பது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  

அலெக்ஸ் ஹேல்ஸ் ஓய்வு அறிவிப்பு

இங்கிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ். இவர் உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் இடம்பிடித்திருந்தார். அப்போது நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து. அதன்பிறகு அவ்வப்போது அணிக்கு அழைக்கப்பட்ட நிலையில், இந்த ஓய்வு முடிவை வெளியிட்டுள்ளார் அவர்.

மேலும் படிக்க | Asia Cup Top Records: ஆசியக் கோப்பையில் பேட்ஸ்மென்களின் அற்புதமான தனிநபர் ஸ்கோர்

156 போட்டிகளில் பங்கேற்பு

34 வயதான அலெக்ஸ் ஹேல்ஸ் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 156 போட்டிகளில் விளையாடியுள்ளார்.  ஓய்வு அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் அவர், அந்த பதிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என தெரிவித்திருக்கிறார்.  இங்கிலாந்து அணிக்காக மூன்று வடிவங்களிலும் எனது நாட்டை (இங்கிலாந்தை) 156 முறை பிரதிநிதித்துவப்படுத்தியது ஒரு பாக்கியம். சில நினைவுகள் மற்றும் நட்புகள் இந்த பயணத்தின்போது கிடைத்தது. ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான நேரம் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.நினைக்கிறேன்.

சர்ச்சையில் அலெக்ஸ் ஹேல்ஸ்

2019 ஆம் ஆண்டில், விருந்தில் போதைப்பொருள் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டபோது ஹேல்ஸ் சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த ஆண்டு ODI உலகக் கோப்பைக்கான அணியில் விளையாடும் வாய்ப்பில் அவர் இருந்தார். போதைப்பொருள் உட்கொண்ட சர்ச்சையில் குற்றம் சாட்டப்பட்டதால், அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் பிறகு, ஹேல்ஸால் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்ப முடியவில்லை. கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பினார். டி20 உலக கோப்பையிலும் விளையாடி சாம்பியன் ஆனார்.

லீக் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்

ஹேல்ஸ் மேலும் எழுதுகையில், 'இங்கிலாந்து அணியுடன் விளையாடும்போது நான் ஏற்ற தாழ்வுகளை கண்டேன். இது ஒரு நம்பமுடியாத பயணம். இங்கிலாந்துக்கான எனது கடைசி போட்டி உலகக் கோப்பை (டி20) இறுதிப் போட்டி என்பதில் நான் திருப்தி அடைகிறேன். ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த இந்தப் பயணத்தில் எனது நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் ஆகியோரிடமிருந்து எனக்கு எப்போதும் நிறைய ஆதரவு கிடைத்தது. உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என கூறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 7 சதங்கள்

அலெக்ஸ் ஹேல்ஸ் தனது சர்வதேச வாழ்க்கையில் 1 டெஸ்ட், 70 ஒருநாள் மற்றும் 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில், அவர் 5 அரை சதங்கள் உட்பட 27.28 சராசரியில் 573 ரன்கள் எடுத்தார். ODIகளில், ஹேல்ஸ் 6 சதங்கள் மற்றும் 14 அரை சதங்களுடன் 37.79 சராசரியில் 2419 ரன்கள் சேர்த்தார். சர்வதேச டி20 போட்டிகளில் ஹேல்ஸின் சாதனை சிறப்பானது. அவர் இந்த வடிவத்தில் ஒரு சதம் மற்றும் 12 அரை சதங்களின் உதவியுடன் 2074 ரன்கள் எடுத்திருக்கிறார்.

இந்தியாவுக்கு எதிராக அறிமுகம்

அலெக்ஸ் ஹேல்ஸ் இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் தனது சர்வதேச வாழ்க்கையைத் தொடங்கினார். 2011-ம் ஆண்டு மான்செஸ்டரில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியில் விளையாடினார். அதன்பிறகு 2014ல் ஒருநாள் போட்டியிலும், 2015ல் டெஸ்ட் அரங்கிலும் அறிமுகமானார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2022-ல் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

மேலும் படிக்க | இனி இந்திய அணியில் இடமில்லை - ஓய்வை அறிவிக்கப்போகும் 3 வீரர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News