ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 47 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் அவர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். கேப்டன் சுப்மன் கில் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோதும், ருதுராஜ் கெய்க்வாட்டுடன் சேர்ந்து ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். அபிஷேக் சர்மாவின் பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறந்தன. 100 ரன்களில் 8 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். ஆனால் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அவர் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அதனால் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஒரே நாளில் பேட் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் அபிஷேக். இவருக்கு பக்கபலமாக ருதுராஜ் கெய்க்வாடும் அதிரடியாக ஆடினார். அபிஷேக் அவுட்டாகும் வரை நிதானம் காத்த ருதுராஜ் கெய்க்வாட் அதன்பிறகு கியரை மாத்தி அதிரடிக்கு மாறினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். இதில் ஒரே ஒரு சிக்சரும், 11 பவுண்டரிகளையும் அவர் விளாசினார். இதேபோல் மற்றொரு முனையில் இருந்த ரிங்கு சிங்கும் பார்முக்கு திரும்பினார்.
மேலும் படிக்க | ரோகித் சர்மாவிடம் அடுத்த 2 கோப்பைகளுக்கான மிஷனை ஒப்படைத்த ஜெய்ஷா
இவரும் ஆரம்பத்தில் மெதுவாக தான் ஆடினார். நேற்றைய போட்டியில் சொற்ப ரன்களுக்கு அவுட்டானதால் கவனமாக ஆடிய ரிங்கு சிங், 15 பந்துகளுக்குப் பிறகு தன்னுடைய வழக்கமான அதிரடிக்கு திரும்பினார். 15 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அவர், 20 ஓவர் முடியும்போது 22 பந்துகளில் 48 ரன்கள் விளாசிவிட்டார். 5 சிக்சர்களும் 2 பவுண்டரிகளையும் பறக்கவிட்டார் ரிங்கு சிங். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்கள் குவித்தது. அதேநேரத்தில் ஜிம்பாப்வே அணியின் பீல்டிங் சுமாராகவே இருந்தது. சில கேட்ச் வாய்ப்புகளையும், தடுக்க வேண்டிய பந்துகளையும் அவர்கள் தவறவிட்டனர். இது இந்திய அணியின் பேட்டிங்கிற்கு கூடுதல் பலமாக அமைந்துவிட்டது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நேற்று ஹராரேயில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இப்போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லாம் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி 115 ரன்களை சேஸிங் செய்ய முடியவில்லை. ஆனால் இன்றைய போட்டியில் வழக்கமான பேட்டிங் பார்முக்கு திரும்பி, இதே பிட்சில் மிக சவாலான ஸ்கோரை ஜிம்பாப்வே அணிக்கு இந்திய அணி நிர்ணயித்துள்ளது. முதல் போட்டியிலும் இந்திய அணியே டாஸ் வெற்றி பெற்றிருந்தது. ஒருவேளை அப்போட்டியிரலும் இன்று செய்ததுபோல் பேட்டிங் எடுத்திருந்தால் இந்திய அணிக்கான முடிவு வேறாக இருந்திருக்ககூட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | இதுவே லாஸ்ட் சான்ஸ்... இந்த வீரர் சொதப்பினால் இனி வெளியே தான் - தப்பிக்குமா இந்தியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ