சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் "அசோகச் சக்கரம்" ஈமோஜியை வெளியிட்ட ட்விட்டர்

இந்தியாவின் 73 வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வகையில் ட்விட்டர் இன்று (புதன்கிழமை) தனிப்பயனாக்கப்பட்ட சுதந்திர தின ஈமோஜியை அறிமுகப்படுத்தியது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 14, 2019, 03:49 PM IST
சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் "அசோகச் சக்கரம்" ஈமோஜியை வெளியிட்ட ட்விட்டர் title=

புதுடெல்லி: இந்தியாவின் 73 வது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வகையில் ட்விட்டர் இன்று (புதன்கிழமை) தனிப்பயனாக்கப்பட்ட சுதந்திர தின ஈமோஜியை அறிமுகப்படுத்தியது. இந்த ஈமோஜி ‘அசோக சக்கரத்தை’ போற்றும் விதமாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. 

அசோகச் சக்கரம் (Ashoka Chakra) அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் ஓர் 24 கோல்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும். அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோகச் சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற சாரநாத்தில் உள்ள சிங்க தலைகள் பதித்த அசோகத்தூணில் உள்ள இந்தச் சக்கரம் இந்திய தேசியக் கொடியில் மையப்பகுதியில் கடற்படை நீலத்தில் இடம் பெற்றுள்ளது.

அசோகச் சக்கரத்தை போற்றும் விதமாக அசோகச் சக்கர விருது இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது இந்தியப் படைத்துறையினால் போர்க்களத்தில் அல்லது அமைதிக்காலத்தில் படைவீரர்கள் வெளிப்படுத்தும் மிக உயரிய வீரதீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற உயிர்த்தியாகத்திற்காகவும் வழங்கப்படுகின்றன. இது போர்க்காலத்தில் நிகழ்த்திய வீரச்செயல்களுக்கு வழங்கப்படும் பரம வீரச் சக்கரத்திற்கு இணையானது. இந்த விருது படைத்துறையில் அல்லாமல் குடிமக்களுக்கும் வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஈமோஜி ஆகஸ்ட் 18 வரை நேரலையில் இருக்கும், இது ஆங்கிலம் மற்றும் இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி மற்றும் ஒரியா போன்ற பல இந்திய மொழிகளில் கிடைக்கும். உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் சுதந்திர தின வாழ்த்துக்கள் கூறும்போதோ அல்லது சுதந்திர தின கருத்துக்களை பகிரும் போதோ பின்வரும் ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி ஈமோஜியுடன் கொண்டாடலாம். #IndiaIndependenceDay, #IDayIndia, #स्वतंत्रतादिवस, #સ્વતંત્રતાદિવસ, #சுதந்திரதினம், #ಸ್ವಾತಂತ್ರ್ಯದಿನ, #ਸੁਤੰਤਰਤਾਦਿਵਸ, #स्वातंत्र्यदिन, #സ്വാതന്ത്ര്യദിനം, #ସ୍ୱାଧୀନତାଦିବସ, #స్వాతంత్ర్యదినోత్సవం, #স্বাধীনতাদিবস.

Trending News