சென்னை: லயோலா கல்லூரியின் திருநங்கை மாணவி டி நளினா பிரஷீதா, கல்லூரி மாணவர் சங்கத்தின் இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் வரலாற்று சாதனை செய்துள்ளார். கல்லூரி அதிகாரிகளின் கூற்றுப்படி, கல்லூரி வரலாற்றிலேயே ஒரு திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். ஜூன் 21 அன்று தேர்தல் நடைபெற்றது.
இரண்டாம் ஆண்டு எம்.எஸ்.சி (விஷுவல் கம்யூனிகேஷன்) மாணவியான நளினா வெற்றியை குறித்து கூறுகையில், தனது வெற்றி மூலம் திருநங்கைகளுக்கான ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று நம்புகிறேன். கல்லூரி பெண்கள் மற்றும் திருநங்கைகளின் நலனுக்காக செயல்படுவேன்.
“நான் 2017 ஆம் ஆண்டில் இதே பதவிக்கு பிரச்சாரம் செய்தேன். அந்த ஆண்டு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அந்த தேர்தலில் திருநங்கையாக இருப்பதால் பிரச்சாரத்தில் நான் ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டேன். ஆனால் இந்த ஆண்டு, இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.சக மாணவர்களின் நம்பிக்கையை நான் வென்றேன் என்பதை எனது தேர்தல் வெற்றி பிரதிபலிக்கிறது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், திருநங்கை நளினா பிரசிதா வெற்றி பெற்றதற்கு திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறியது, "சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்."
இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.