அமெரிக்க தேர்தல் பரப்புரையின் போது மழையில் நடனமாடிய கமலா ஹாரிஸ் வீடியோ வைரலாகி வருகிறது...!
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹாரிஸ் (Kamala Harris), புளோரிடா பேரணியில் வாக்காளர்களை உரையாற்றும் போது மழையில் நடனமாடும் வீடியோ அனைவரையும் ஆன்லைனில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலுடன் சேர்ந்து துணை அதிபர் பதவிக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர், முதல் கறுப்பின பெண் துணை அதிபர், முதல் தெற்காசிய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் இந்திய வம்சாவளி பெண் துணை அதிபர், முதல் தமிழ் வம்சாவளி பெண் துணை அதிபர் போன்ற பல்வேறு சாதனைகளை அவர் பதிவு செய்வார்.
ALSO READ | “தீமை அழிந்து நன்மை மலரட்டும்”... ஜோ பிடன், கமலா ஹாரிஸின் நவராத்திரி வாழ்த்து..!!!
அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லே நகரில் கமலா ஹாரிஸ் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்ட போது அங்கு திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது.
இதையடுத்து, மழை பெய்த நிலையிலும் அசராத கமலா ஹாரிஸ் குடையை பிடித்துக்கொண்டு தனது பிரசாரத்தை தொடர்ந்துள்ளார். அப்போது, அவர் தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்த குடையைப் பிடித்தபடி மழையில் நடனமாடினார். கமலா ஹாரிஸ் மழை நடனத்தை வீடியோ எடுத்த ஆதரவாளர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
Here’s Sen. Harris today in Florida: pic.twitter.com/z2lxKMJ89e
— The Recount (@therecount) October 19, 2020
இந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமலா ஹாரிஸ், "மழையோ அல்லது வெயிலோ ஜனநாயகம் யாருக்காகவும் காத்திருக்காது" என்று குறிப்பிட்டுள்ளார். மழையில் குடையை பிடித்துக்கொண்டு நடனமாடி அனைவரின் அன்பையும் பெற்றுள்ளார் கமலா ஹாரிஸ்.