Dinesh Karthik: இந்திய அணியின் பயிற்சியாளராகும் ஆசை இப்போதைக்கு இல்லை என்றாலும் ஒருநாள் இது நடக்கும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டது மிகவும் வரவேற்கதக்கது. அந்த போட்டியை பார்க்க மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன். கடைசி வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடாதது வருத்தம் தான் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் லெஜண்ட்ரி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க்கும் தென் இந்திய அணிக்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மைக்கேல் பெவன், தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல், கேதர் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் கார்த்திக், லெஜண்ட்ரி கிரிக்கெட் ஓய்வு பெற்ற வீரர்களின் திறமையை வெளிக்கொண்டுவரும் முக்கியமான கிரிக்கெட் தொடராக அமையும் எனவும் இதன் மூலம் நிறைய திறமைசாலிகளை உருவாக்கவும் முடியும் எனவும் தெரிவித்தார்.
இனி வரும் காலங்களில் கிரிக்கெட்டில் பெண்களுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் தைரியமாக கிரிக்கெட்டை தேர்வு செய்யலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். ஆர்.சி.பி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இணைவது மகிழ்ச்சியான தருணம் எனவும் எப்படியாவது ஆர்.சி.பி.க்கு கோப்பையை வென்று கொடுப்போம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடைசி வரை இணையாதது வருத்தம் அளிப்பதாகவும், ஆர்சிபி அணியின் ரசிகர்கள் தீவிர விசிவாசிகளாக இருக்கின்றனர் எப்படியாவது அந்த அணி கோப்பை வெல்ல உறுதுணையாக இருப்பேன் எனவும் மீண்டும் அணி உடன் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை இந்திய அணிக்கு சவாலானதாக இருக்கும் என தெரிவித்தார். அதே நேரத்தில் இந்திய அணி வீரர்களின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது என பேசினார்.