டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் அக்சர் படேலின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி 176 ரன்கள் குவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி பர்படாஸில் நடைபெற்றது. இதில்இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.
முதல் ஓவரில் கோலி அதிரடியாக ஆடியதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர். ஆனால் அந்த மகிழ்ச்சி இரண்டாம் ஓவரில் நீடிக்கவில்லை. கேசவ் மகாராஜ் வீசிய 2வது ஓவரின் 4வது பந்தில் ரோகித் ஷர்மா 9 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அதே ஓவரின் கடைசி ஓவரில் ரிஷப் பந்த் டக் அவுட்டானார். இதனை தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் 4வது ஓவரில் ரபாடா பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அதனை தொடர்ந்து முன்கூட்டியே களமிறங்கிய ஆல்ரவுண்டர் அக்சர் படேல், விராட் கோலியுடன் கைகோத்து நிதானமாக ஆடினார். விராட் கோலி ஒருபக்கம் நிதானம் காட்ட மறுபக்கம் அக்சர் படேல் அதிரடியாக ஆடி இந்திய அணி இருவரும் சரிவிலிருந்து மீட்டனர்.
இந்த நிலையில் 13.3 ஆவரில் எதிர்பாராத விதமாக 31 ரன்களில் 47 ரன்கள் எடுத்திருந்த அக்சர் படேல் ரன் அவுட் ஆனார். இதனை தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபேவும் கோலியுடன் இணைந்து ஆடினார்.
விராட் கோலி 48 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆட ஆரம்பித்தார் கோலி. அவர் 59 ரன்களில் 76 ரன்கள் எடுத்திருந்தபோது ஜான்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து கடைசி ஓவரில் சிவம் துபே 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.
177 ரன்கள் எடுத்தால் நடப்பு உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது பேட்டிங் ஆடி வருகிறது.