நம் உடலில் அதிகம் வேலை செய்யும் உறுப்பு கல்லீரல் தான். இது நமது உடலில் சேர்ந்து இருக்கும் நச்சுக்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடலுக்கு சேர்ப்பதும் கல்லீரலின் வேலை தான்.
இன்றைய வாழ்க்கை முறை நமக்கு பலவித ஆரோக்கிய பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்கிறது. அதில் ஒன்று கொழுப்பு கல்லீரல். கொழுப்புக் கல்லீரல் ஏற்படுவதை தவிர்க்க, சாப்பிட வேண்டியவை மற்றும் சாப்பிட கூடாத உணவுகளை அறிந்து கொள்ளலாம்.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் உணவு பழக்கத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. பாதிப்படைக்கப்பட்ட கல்லீரல் காரணமாக உடலுக்கு ஏற்படும் நோய்கள் ஏராளம். கிட்டத்தட்ட நூறு வகை நோய்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர் சுகாதார வல்லுநர்கள்.
கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்: உடலில் நச்சுக்கள் வெளியேறாமல் இருப்பதால் உடலில் திரவம் சேர்ந்து வயிற்றுப் பகுதி அல்லது கால்களில் வீக்கங்கள் ஏற்படலாம். இது தவிர தூக்கமின்மை, காரணம் இல்லாமல் அடிக்கடி ஏற்படும் குமட்டல் வாந்தி, தூக்கமின்மை ஆகியவை கல்லீரல் பாதிப்பின் எச்சரிக்கை அறிகுறிகள்.
பீட்ரூட்: இரும்புச் சத்து நிறைந்த அற்புத காய்கறியான பீட்ரூட், கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கும். பீட்ரூட்டில் உள்ள வீட்டை என்ற சத்து, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருந்து.
பூண்டில் காணப்படும் செழினியம் மற்றும் அலிசின் ஆகிய சேர்மங்கள், கல்லீரலில் சேர்ந்து இருக்கும் நச்சுக்களை அகற்றி ஆரோக்கியமாக வைத்திருக்கும். கூடுதல் பயனாக உடலில் உள்ள கொலஸ்ட்ராலும் கட்டுக்குள் இருக்கும். எனவே தினமும் பூண்டு சாப்பிட வேண்டும்.
காலிஃப்ளவரில் உள்ள க்ளுகோதயோன், என்சைங்களின் செயல்பாட்டிற்கு உதவும் ஆக்ஸிஜனேற்றங்களை கொண்டது. இதனால் கல்லீரலில் சேர்ந்திருக்கும் நச்சுக்கள் வெளியேறி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் கல்லீரலின் ஆரோக்கியத்தை காலி செய்யும் ஆற்றல் கொண்டவை. சிப்ஸ், ரெடி டு ஈட் உணவுகள் போன்ற பேக் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக இதில் சேர்க்கப்படும், சோடியம் மற்றும் பிற ரசாயனங்கள் கல்லீரலை சேதப்படுத்தும்.
மைதா உணவுகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையே காலி செய்யும் திறன் பெற்றது. இதில் ஊட்டச்சத்து என்பது பெயரளவுக்கும் இல்லை. வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது தவறில்லை. ஆனால் இதனையே வழக்கமாகக் கொண்டால் கல்லீரல் காலி ஆகிவிடும். மைதா பரோட்டா மட்டுமல்ல, மைதா சேர்த்த பிஸ்கட்டுகள், பிரட்டுகள் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)