Chennai police warning : அனுமதியின்றி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் 3 ஆண்டுகள் சிறை என சென்னை காவல்துறை எச்சரிக்கை
Chennai police warning : சென்னை காவல்துறை விடுத்திருக்கும் எச்சரிக்கை அறிவிப்பில் பிறரின் புகைப்படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது என்றும், மீறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளது.
அண்மைக்காலமாக சமூகவலைதள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள், குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிட்டு மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்துகள் பதிவிடப்படுகின்றன.
அண்மையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் புகைப்படத்தையும், அவரது மனைவியும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான வந்திதா ஐபிஎஸ் புகைப்படத்தையும் பகிர்ந்து சிலர் மிரட்டல் விடுக்கும் வகையில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டனர்.
இது காவல்துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியது. காவல்துறையினருக்கே எந்தவித பயமும் இல்லாமல் மிரட்டல் விடுக்கும் அளவுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது? என்ற கேள்வியும் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஆபாசமாக பதிவிடுபவர்களின் கணக்குகளை தமிழக காவல்துறை கண்காணிக்க தொடங்கியது. அதில் குறிப்பிட்ட சில நபர்களை அழைத்து எச்சரிக்கையும் கொடுத்திருக்கிறது.
இந்த சூழலில் சென்னை காவல்துறை முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உரிய அனுமதியின்றி யாருடைய புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது என தெரிவித்துள்ளது.
ஒருவேளை இந்த எச்சரிக்கையையும் மீறி தனி நபரின் அனுமதியின்றி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக புதன்கிழமை சென்னை காவல்துறை எக்ஸ் பக்கத்தில் விடுத்திருக்கும் எச்சரிக்கையில், சமூக ஊடகங்களில் தனிநபரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66இ பிரிவின்படி, ஒருவரின் புகைப்படத்தை அவர்களின் அனுமதியின்றி சமூக ஊடகங்களில் பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930 என்ற எண்ணுக்கு அழைத்து புகார்களை தெரிவிக்கலாம் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.