காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது தட்பநிலை பூஜ்ஜிய டிகிரியை எட்டியுள்ள நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஏரி, ஆறு, அருவிகள் என அனைத்தும் உறைந்து நிற்பதை பார்த்து சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதன் கிழமை முதல் காஷ்மீரில் கடுமையான குளிர் காலம் தொடங்கியுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரியை தொட்டுள்ளது. ஸ்ரீநகரில் இரவு வெப்பநிலை மைனஸ் 6 டிகிரியாகவும், குல்மார்க்கில் மைனஸ் 9 டிகிரியாகவும் இருந்தது.
சுமார் 40 நாட்கள் நீடிக்கும் கடும் குளிர் காலம் டிசம்பர் 21ஆம் தேதி துவங்குகிறது. இந்த காலகட்டத்தில் கடுமையான குளிர் நிலவும். குறைந்த பட்ச தட்ப நிலை பூஜ்ஜியத்திற்கு கீழே இருக்கும்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் குளிர்காலத்தின் தாக்கம் அதிகரித்தவுடன் இங்குள்ள பல ஏரிகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் முற்றிலும் உறைந்துவிட்டன.
குல்மார்க்கின் புகழ்பெற்ற டிராங் நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைந்துவிட்டது. இங்கு வெப்பநிலை மைனஸுக்குக் கீழே சென்றுவிட்டது. நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து, திரைப்படங்களில் மட்டுமே பார்த்த காட்சிகளை நேரில் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த இடம் குளிர்கால அதிசயம் என்று அழைக்கப்படுகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே இருக்கும் என்றும் மேலும் தட்ப நிலை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சுற்றுலாப் பயணி சிந்து கூறுகையில், "இது மிகவும் அழகான காட்சி. இதுபோன்ற காட்சியை இதுவரை நான் பார்த்ததில்லை. காஷ்மீருக்கு குளிர் காலத்தில் வர வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் உண்டு. மிகவும் அழகான காட்சி." இது எனக்குக் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. நான் உலகில் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன், ஆனால் இது மிகவும் அற்புதமான இடம், அற்புதமான உணர்வு." என்றார்