நிர்மலாதேவி விவகாரத்தால் உலகளவில் தமிழர்களின் தன்மானத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை என தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதைக்குறித்து அறிக்கையில் கூறியதாவது:-
காமராஜர் பல்கலை கழகத்தின் கீழ் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான தேவாங்கர் கலை கல்லூரியின் துணை பேராசிரியராக பணிபுரியும் கணவனை பிரிந்திவாழும் நிர்மலாதேவி அவர்கள் அதே கல்லூரியில் படிக்கும் மாணவிகளை தவறானவழிக்கு அலைபேசி மூலம் அழைத்து இருப்பதை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த நிகழ்வு உலகளவில் தமிழர்களின் தன்மானத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் முதல் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் வரை சரியாக வழிநடத்த வேண்டிய ஆசிரியர்கள் இதுபோன்ற தவறான பாதைக்கு மாணவிகளை அழைத்துச் செல்வது “வேலியே பயிரை மேய்வது” போன்று உள்ளது. ஒரு பேராசிரியர் இவ்வளவு தைரியமாக செயல்பட்டிருக்கின்றார் என்றால் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் பின்னணியில் இருக்கின்றார்களோ? என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
இந்த சூழ்நிலையில் தமிழக ஆளுநர் அவர்கள் தாமாக முன்வந்து பத்திரிக்கையார்களை சந்தித்து நிர்மலாதேவியை நான் பார்த்ததில்லை என்று கூறுவது “எங்கப்பன் குதிருக்குள்” இல்லை என்ற தமிழ் பழமொழிதான் நினைவுக்குவருகிறது.
அதுமட்டுமல்லாமல் தனக்கு 78 வயதாகிறது என்றும், பேரன், பேத்திகள், கொள்ளுபேரன்கள் இருக்கிறார்கள் என்றெல்லாம் தன்னிலை விளக்கம் அளித்தது எல்லோருக்கும் சந்தேகத்தையும், எண்ணற்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தமிழகத்தின் மூத்த குடிமகனாக இருக்கின்ற ஆளுநர் பத்திரிக்கையார்கள் சந்திப்பிலேயே ஒரு பெண் நிரூபரின் கன்னத்தை தொட்டது அநாகரிகத்தின் உச்சகட்டம். எந்தவொரு பயமுமின்றி நள்ளிரவு நேரத்தில் கூட ஒரு பெண் தனியாக செல்லுகின்ற நிலை வரும்பொழுதுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று மகாத்மா காந்தி அவர்கள் கூறியுள்ளார்.
ஆனால் இங்கு சிறுமிகள் முதல், மாணவிகள், குடும்பப் பெண்கள் என வயது வித்தியாசம் பார்க்காமல் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுவது இந்தியா முழுவதும் தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற மாபாதக செயல்களை தடுத்து நிறுத்த சட்டங்கள் மூலம் கடும் தண்டனைகளை வழங்கவேண்டும்.
பேராசிரியர் நிர்மலா தேவியின் கைதும், அவருக்கு கிடைக்ககூடிய தண்டனையும் எதிர்காலத்தில் யாரும் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற பயத்தை அனைவருக்கும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். மேலும் இந்த பிரச்சனையில் மத்திய அரசின் ஆதரவில் இருக்கின்ற தமிழக ஆளுநர் அவர்களே சந்தேக வளையத்திற்குள் இருப்பதால், சிபிஐ கூட இதை நேர்மையாக விசாரிக்குமா என்கிற சந்தேகம் இயல்பாகவே எழுகின்றது.
ஆகவே நிர்மலாதேவி இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தாரா, அவரின் பின்னணியில் உள்ள “பசுத்தோல் போர்த்திய புலிகள்” போன்ற சக்திவாய்ந்த, அதிகாரமிக்க நபர்கள் யார், யார் என்பதை கண்டறிய, நீதிமன்றமே தானாக முன்வந்து தனது நேரடி கண்காணிப்பில் மிக நேர்மையான அதிகாரிகளை கொண்ட விசாரணை குழுவை அமைத்து, உண்மைகளை கண்டறிந்து இந்நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக தெரிவித்தால்தான், பெற்றோர்கள் அச்சமின்றி தமது பெண்பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிகளுக்கு தைரியமாக அனுப்பக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.