சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'போட்' திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம். எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நில கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் டீசர், இரண்டு பாடல்கள், ப்ரோமோ பாடல், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி படத்தைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
மேலும் படிக்க | Maharaja Movie: மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீ-மேக்! ஹீரோ யார் தெரியுமா?
இயக்குநர் சிம்பு தேவன் பேசுகையில், ''நான் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ஃபேண்டஸி, காமெடி என வித்தியாசமான வகைமையில் இருக்கும். இந்த படத்திலும் இவை இரண்டும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த நல்ல வாய்ப்பை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் பிரேம்குமார் தான் வழங்கினார். அவரை முதன்முதலாக சந்தித்து அரை மணி நேரம் இந்த கதையை விவரித்தேன். இந்தக் கதை என் மனதில் நீண்ட நாளாக இருக்கும் கதை. கொரோனா காலகட்டத்தின் போது நான் எழுதிய 'கசடதபற' எனும் படைப்பு வெளியானது. அந்தத் தருணத்திலேயே 'போட்' கதையை எழுதிக் கொண்டிருந்தேன். இந்த கதையை தயாரிப்பாளரிடம் சொன்ன போது, 'இதில் இடம் பெறும் உணர்வும், வித்தியாசமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதனை என்னிடம் விவரித்தது போல் படமாக உருவாக்கி தாருங்கள்' எனக் கேட்டுக் கொண்டார். என் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் சொன்ன அந்த வார்த்தை தான் இதன் தொடக்க புள்ளி.
இந்தப் படத்தில் நானும் தயாரிப்பாளராக இணைந்திருக்கிறேன். இந்த கதைக்கு யார் நாயகன் என தேடும்போது நான் ஏற்கனவே யோகி பாபுவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்தேன். அவரை ஒரு முறை மீண்டும் சந்தித்து இக்கதையை விவரித்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. 'இதில் நான் நடிக்கிறேன்' என்றார். அதன் பிறகு அனைத்து பணிகளும் விரைவாக நடைபெற்றன. யோகி பாபுவை தொடர்ந்து எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த் ஆகியோர் ஒப்பந்தமானார்கள். கௌரி கிஷன் - இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு சாம்ஸ், மதுமிதா, ஷா ரா, அக்ஷத் ஆகியோரும், ஜெஸ்ஸி என்ற வெளிநாட்டு நடிகரும் நடிக்க ஒப்பந்தமானார்கள். அதன் பிறகு பாட்டி கேரக்டரில் குலப்புளி லீலா நடித்தார்கள். இந்த வயதிலும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினார். இப்படி திறமையான கலைஞர்கள் ஒரு பக்கம் ஒன்றிணைந்தார்கள். எனக்கும், என்னுடைய குழுவினருக்கும் ஆதரவு தாருங்கள்," என்றார்.
நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில், ''சிம்பு தேவனின் இயக்கத்தில் பல படங்களில் நடித்திருக்கிறேன். இதில் 'இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்' படத்தில் நடிக்கும் போது கஷ்டப்பட்டேன். இந்த படத்திலும் நடிக்கும் போது கஷ்டப்பட்டேன். அந்தப் படத்தில் குதிரை என்றால் இந்த படத்தில் போட். தம்பி சிம்பு தேவன் சொன்னது போல் கடலை கணிக்க முடியவில்லை. திடீரென்று தண்ணீர் உள்வாங்குகிறது. திடீரென்று தண்ணீர் அதிகரிக்கிறது. திடீரென்று அலை அடிக்கிறது. போட்டில் அமர்ந்து நடிக்கும் போது முதுகு வலியும் ஏற்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் இன்பச் சுற்றுலா சென்றது போல் தான் இருந்தது. என்னுடன் நடித்த சக நடிகர்கள் அனைவரும் அதே போட்டில் தான் இருக்க வேண்டும். யாரும் எங்கும் செல்ல முடியாது. நான் ரசித்து ரசித்து செய்து கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று," என்றார்.
நடிகர் யோகி பாபு பேசுகையில், "போட் திரைப்படம் இந்த அளவுக்கு சிறப்பாக உருவாகி உள்ளதற்கு இயக்குநர் சிம்பு தேவன் தான் காரணம், அவருக்கு எனது நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர், என்னுடன் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. கடின உழைப்போடு இப்படம் உருவாகியுள்ளது. நீங்கள் அனைவரும் உங்கள் மேலான ஆதரவை 'போட்' திரைப்படத்திற்கு வழங்க வேண்டும். மிக்க நன்றி," என்று கூறினார்.
மேலும் படிக்க | குக் வித் கோமாளி 5ல் அதிக சம்பளம் வாங்கும் குக் ‘இவர்’தான்! ஒரு நாளைக்கு இவ்வளவா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ