மாணவர்களை விடுதலை செய்யுங்கள்: சிம்பு ஆவேசம்

Last Updated : Jan 29, 2017, 04:21 PM IST
மாணவர்களை விடுதலை செய்யுங்கள்: சிம்பு ஆவேசம் title=

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து நடத்திய அமைதிப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தாலும், இந்த போராட்டம் கடைசியில் வன்முறையில் முடிந்தது அனைவருக்கும் பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது. 

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சிம்பு, இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர்:-

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனாவில் கடந்த 6 நாட்களுக்கும் மேலாக அமைதி முறையில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் முடிவில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது. இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டவுடன் யாராவது ஒரு அரசு பிரதிநிதி மாணவர்களிடம் தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் சட்டத்தின் சாராம்சம் குறித்து பேசி, அவர்களிடம் விளக்கியிருக்கலாம். 

போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு காவல்துறை அவகாசம் அளித்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது. இந்த போராட்டம் தனிப்பட்ட ஒருவரை முன்னிலைப்படுத்தி தொடங்கிய போராட்டம் கிடையாது.

மாணவர்களின் இந்த போராட்டத்தின் வெற்றி கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இந்த வெற்றியை கொண்டாடுவதா? கோபப்படுவதா? என்று தெரியாமல், எந்தவித அர்த்தமும் இல்லாமல் முடிந்தது வருத்தம் அளிக்கிறது. 

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கத்தான் மீனவர்களும் போராட்டத்தில் குதித்தனர். ஆனால், அவர்களை கைது செய்தது எந்தவிதத்தில் நியாயம்? 

அரசுக்கு நான் மூன்று கோரிக்கைகளை வைக்கிறேன். 

வன்முறையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். 

அவர்களை விடுதலை செய்யமுடியாது என்றால், அவர்களின் போராட்டத்திற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன். அதனால், என்னையும் கைது செய்யுங்கள். 

மேலும், கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். மற்றொன்று, இந்த போராட்டத்தின் வெற்றியை கொண்டாட அரசு ஒருநாள் ஒதுக்கித் தரவேண்டும். 

மெரினாவில் 144 தடை உத்தரவு போடப்படுவதற்கு அவசியம் என்ன? 

என்று சிம்பு அரசிடம் கேள்வி கேட்டுள்ளார்.

Trending News