கோயிலில் உள்ள கொடிமரத்தால் பக்தர்களுக்கு என்ன நன்மை?

கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்வதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம்... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2021, 06:28 AM IST
கோயிலில் உள்ள கொடிமரத்தால் பக்தர்களுக்கு என்ன நன்மை? title=

கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்வதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம்... 

கோயில்களில் கொடியேற்றி, திருவிழா நடைபெறும் காலம் இது. பத்துநாள் திருவிழா, பன்னிரண்டு நாள் திருவிழா என்று பல கோயில்களில் கோலாகலமாக நடைபெறும். இப்படி திருவிழா (Festival) நடத்துவதன் தாத்பர்யம், கோயிலுக்கு வந்து இறைவனை தரிசிக்க முடியாத அன்பர்களைத் தேடி இறைவனே வீதியுலா வந்து தரிசனம் தந்து அருள்பாலிப்பதற்குத்தான். அப்படி திருவிழாக் காலங்களில் கோயிலில் உள்ள கொடிமரத்தில் (flagpole) கொடி ஏற்றுவது வழக்கம். கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்வதற்கான காரணம் என்ன என்பதைப் பார்ப்போம்.

கொடிமரம், தான் உயர்ந்து நிற்பதுபோல் ஆலயத்தில் இறைவனை (Lord) தரிசிக்க வரும் பக்தர்களின் வாழ்வினையும் உயரச் செய்யும் உன்னத அடையாளமாக உயர்ந்து நிற்கிறது, கொடிமரங்கள் பெரும்பாலும் சந்தனம் (Sandalwood), தேவதாரு, வில்வம் மற்றும் மகிழம் போன்ற மரங்களினாலேயே செய்யப்படுகின்றது.

கொடிமரத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமையப்பெற்றிருக்கும். இதன் அடிப்பாகம், சதுர வடிவத்தில் இருக்கும். இது படைத்தல் தொழிலைக் குறிக்கும், `பிரம்ம பாகம்’ (Part of Brahma) என்றும், அதற்கு மேலே உள்ள எண்கோண வடிவமானது காத்தல் தொழிலை குறிக்கும் `விஷ்ணுபாகம்’ (Part of Vishnu) என்றும், அதற்கும் மேலாக உருண்டையான நீண்ட பாகம் அழித்தல் தொழிலைக் குறிக்கும் `ருத்திரபாகம்’ என்றும் அழைக்கப்படுகின்றது .

கொடிமரத்தின் பீடம், `புத்திரபீடம்’. பக்தர்களின் ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியிருப்பதை நினைவூட்டும் வகையில் கொடிமரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும். தரிசிக்க வருபவர்கள் இறைவனிடம் தங்கள் ஆன்மாவின் மீதான பாசக்கட்டு அறுமாறு மனதை பலியிட்டு இறைவனிடத்தில் தஞ்சம் புக வேண்டும். மேலும், கொடிமரத்தில் 32 வகையான வளையங்கள் சுற்றப்பட்டிருக்கும்.

ALSO READ | வடக்குத் திசையில் வைத்து குபேரனை வணங்கினால், செல்வ வளம் பெருகுமா?

இது, நம் உடலில் உள்ள முதுகுத்தண்டு வடத்தின் 32 எலும்பு வளையங்களை குறிக்கிறது. ஆலயங்களில் கொடிமரம், கருவறைக்கு நேராக நடப்பட்டிருக்கும். மேலும், கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் கொடிமரத்தை எவ்வளவு தூரத்தில் அமைக்க வேண்டும் என்பதற்கும் விதிமுறைகள் உள்ளன. கொடிமரங்களை மழை, வெயில் போன்ற இயற்கை மாற்றங்களில் இருந்து காப்பதற்காக பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் ஆன கவசங்களை அணிவிப்பது வழக்கம்.

சில ஆலயங்களில் தங்கக் கவசங்கள் வரை அணிவிக்கப்படுகின்றன.திருவிழா நாட்களின் முதல் நாளன்று கொடிமரத்தில் கொடியேற்றப்படுகின்றது. இந்த நிகழ்வு, `துவஜாரோகணம்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் நோக்கம், கோயிலுக்கு வந்து இறைவனை தரிசிக்க முடியாத வயதானவர்களுக்கு இறைவனே வீதியுலாவாக வந்து தரிசனம் தந்து அருள்பாலிக்க இருப்பதை அறிவிப்பதற்குத்தான்.

அதேபோல திருவிழாக்கள் நிறைவுற்றதும், கொடிகள் இறக்கப்படுகின்றன. இது, `துவஜாவரோகணம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.கொடிமரத்தை சூட்சும லிங்கமாக எண்ணி வணங்க வேண்டும். இறைவனின் மூல மந்திரத்தை உச்சரித்தபடியே மூன்று முறை வலம் வந்து, ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும்.

சிவாலயத்தில் நந்தியையும், பெருமாள் கோயிலில் கருடனையும், அம்பாள் வீற்றிருக்கும் ஆலயங்களில் சிம்மத்தையும், முருகர் ஆலயத்தில் மயிலையும், விநாயகர் ஆலயங்களில் மூஷிகத்தையும், துர்கை ஆலயத்தில் சிம்மத்தையும் கொடிமரத்தின் மேற்புறத்தில் கொடிச் சின்னங்களாகப் பொறிக்கப்பட்டிருக்கும்.

மின்னூட்டமடைந்த பிரபஞ்ச கதிர்கள், கருவறை விமானத்தின் மீதுள்ள கலசங்களால் ஈர்க்கப்படுகின்றது. பின்னர் இந்தக் கதிர்கள் மூலவரின் மீது பரவுகின்றன. இந்த பிரபஞ்ச சக்தியை நேரடியாக உணரும் தன்மை பக்தர்களுக்கு இருப்பதில்லை. கொடிமரமே இந்த சக்தியை ஈர்த்து, பக்தர்களின் உடல் ஏற்கும்படியாகச் செய்கிறது.

கொடிமரம் இல்லை எனில், இந்தச் சக்தியை நேரடியாக பக்தர்கள் ஏற்றுக்கொள்வது கடினம். இது, ஆலயங்களில் கொடிமரங்கள் அமையப் பெற்றிருப்பதற்கான அறிவியல் காரணி!

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News