தங்கம் என்றாலே அனைவரின் முகமும் புன்சிரிப்பால் விரியும். அதிலும் பெண்களுக்கு பொன்னகைப் போட்டால் புன்னகை முகத்தில் விரியும். ஆனால், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை மிகவும் அதிகரித்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில், தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை, 37 ஆயிரம் ரூபாயை தாண்டிவிட்டது.
நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். தங்கம் பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் தங்கம் முக்கிய முதலீடாக இருக்கிறது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே முடங்கி கிடக்கும் நிலையில் தொழில்கள் தள்ளாடுகின்றன. இந்த நிலையில், உலக பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.
தங்கம் என்பது உண்மையில் ஒரு உலோகம் மட்டுமே. இரும்பு, அலுமினியம் போல் இதுவும் ஒரு உலோகம் என்றால் அது பெண்களின் முகத்தில் சுளிப்பை ஏற்படுத்தினாலும் நிதர்சனத்தை மறைக்க முடியாது என்பதுதானே உண்மை!
Also Read | டெல்லியில் கோரதண்டவமாடும் பாலைவன வெட்டுக்கிளிகள்
மஞ்சள் நிறமான இந்த உலோகமானது அறிவியலில் Au என்ற குறியீட்டினால் குறிக்கப்படுகிறது. நீரைப்போல் ஏறத்தாழ 19 மடங்கு எடையுள்ளது. ஆபரணங்கள் செய்வதற்கு பயன்படும் இந்த உலோகமானது பண்டைய காலத்தில் பரிமாற்று நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டது.
வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்த வல்ல தங்கம், காற்றின் தாக்கத்தால் நிறம் மங்குவதில்லை. தங்கம் துருப்பிடிக்காது, எப்போதும் பளபளப்பாகவே இருக்கும்.
காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது தங்கத்தின். 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரையிலான தங்கமே ஆபரணம் செய்ய உகந்தது. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற பிற உலோகங்களும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.
Also Read | கிளி மற்றும் லங்கூர் வளர்த்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
2004-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டிருந்தாலும், தற்போது தங்கத்தின் விலை விண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். தங்கத்தின் இருப்பின் மதிப்பிற்கு ஏற்றாவாறு ஒரு நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயத்தை அச்சிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.