கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து முடிவு தெரியும் வரை கர்நாடகா திரும்ப மாட்டோம் என காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள அதிருப்தி MLA-க்கள் அறிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத, காங்கிரஸ் கூட் டணி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த இரு வாரங்களில் 12 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜி னாமா செய்தனர். பெரும்பான்மையை இழந்த குமாரசாமி பதவி விலக வேண்டும் என பாஜக தரப்பில் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
எனவே குமாரசாமி கடந்த 12-ஆம் தேதி சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருப்பதாக அறிவித்தார். இதற்கிடையில் அதிருப்தி MLA-க்களின் ராஜினாமா மனு மீதான வழக்கில் உச்சநீதிமன்றம், ''அதிருப்தி MLA-க்களின் ராஜினாமாவை ஏற்கும்படி பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது. காங்கிரஸ்,மஜத கொறடா நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு அதிருப்தி MLA-க்களை கட்டாயப் படுத்தக்கூடாது'' என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் வெள்ளியன்று பிற்பகல் 1.30 மணிக்குள் முதல்வர் குமாரசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வஜுபாய் வாலா கடிதம் எழுதியிருந்தார்.
பெரும் பரபரப்பிற்கிடையே கூடிய கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான காரசார விவாதத்துடன் முடிவடையந்தது. விவாதத்தின் போது ஆளுநர் விதித்த கெடு குறித்து பேசிய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ்குமார், ஆளுநரின் கடிதம் முதல்வருக்கு மட்டுமே அனுப்பப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு பேசினார்.
மேலும், தன்னை நிர்பந்திக்க, இதுவரை யாரும் பிறக்கவில்லை எனவும் சபாநாயகர் காட்டமாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து அவசரப்பட வேண்டாம் என பாஜக எம்.எல்.ஏ.க்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் பாஜகவினர் ஜனநாயகத்தை அழிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனிடையே மாலை ஆறு மணிக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என மீண்டும் ஆளுநர் வஜுபாய் வாலா, குமாரசாமிக்கு கெடு விதித்து கடிதம் அனுப்பினார். பிற்பகல் மூன்று மணிக்கு அவையில் பேசிய குமாரசாமி, ஆளுநரிடம் இருந்து வந்துள்ள இரண்டாவது காதல் கடிதம் தன்னை மிகவும் கவலையடைய செய்திருப்பதாக குறிப்பிட்டார்.
Rebel #Karnataka MLAs in #Mumbai: We haven't come here with other intention but to teach a lesson to this coalition (Congress-JDS) govt. We haven't come here for money or any other thing. We will go back to Bengaluru once everything is sorted out. pic.twitter.com/zVNXPnIKBI
— ANI (@ANI) July 21, 2019
மேலும் எடியூரப்பாவின் உதவியாளரான சந்தோஷ், சுயேட்சை எம்.எல்.ஏ. நாகேஷ் உடன் விமானத்தில் பயணிக்கும் படத்தை வெளியிட்ட அவர், கடந்த பத்து நாட்களாகவே எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைக்கு வாங்கி வருவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவை சபாநாயகரிடமே விட்டுவிடுவதாக கூறிய குமாரசாமி, ஆளுநரின் கடிதங்களில் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
ஆளுநர் விதித்த 2 கெடுவும் முடிவடைந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலே அவை ஒத்திவைக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நீண்டுக்கொண்டே சென்றதால், பேரவையை சபாநாயகர் ரமேஷ் குமார் திங்கள் கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைத்தார்.
எனவே நாளை மீண்டும் கூடும் கர்நாடகா சட்டப்பேரவை கூட்டத்தில் குமாரசாமி ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுவரையில் அதிருப்தி MLA-க்கள் பெங்களூரு திரும்பாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.