மத்திய அமைச்சர் பதவியில் இருந்து உபேந்திர குஸ்வாஹா ராஜினாமா செய்ததாக தகவல்....
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சர் பேந்திர குஸ்வாஹா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், கூட்டணியில் இருந்து தனது ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. மேலும், நாளை நாடாளுமன்றக் கூட்டத்தொடர், அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், எதிர்க்கட்சிகள் அமைக்கும் மகா கூட்டணியை எதிர்கொள்வது என பல்வேறு மிக முக்கியமான விஷயங்கள் அணிவகுத்து நிற்கும் நிலையில் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை பா.ஜ.க இன்று துவங்கியது. இந்நிலையில், திடீர் திருப்பமாக BJP கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி விலகியுள்ளது.
Sources: RLSP Chief Upendra Kushwaha resigns as Union Minister pic.twitter.com/1wKs7AXI3H
— ANI (@ANI) December 10, 2018
பீகாரில் கடந்த முறை பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி வெற்றி பெற்ற நிலையில், உபேந்திர குஷ்வாஹா மத்திய அமைச்சர் ஆனார். ஆனால், இந்த முறை அக்கட்சிக்கு இரண்டு தொகுதிகளை மட்டுமே BJP ஒதுக்கீடு செய்ய முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்தது ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி.
மேலும், கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமாருக்கும், குஷ்வாஹாவுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதையடுத்து, கூட்டணியில் இருந்து விலகுவதாக உபேந்திர குஷ்வாஹா அறிவித்துள்ளார். மேலும் அவர் தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது அரசியல் சூழலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.