Sunita Kejriwal: முதல்வர் பதவியை குறிவைக்கும் கெஜ்ரிவாலின் மனைவி... மத்திய அமைச்சர் பகீர்!

Sunita Kejriwal News: டெல்லி முதல்வர் பதவியை அடைய அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா தயாராகி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடுமையாக சாடியுள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 29, 2024, 05:12 PM IST
  • அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
  • நேற்று அவர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் ஆஜர்படுத்தப்பட்டார்.
  • நான்கு நாள்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.
Sunita Kejriwal: முதல்வர் பதவியை குறிவைக்கும் கெஜ்ரிவாலின் மனைவி... மத்திய அமைச்சர் பகீர்!  title=

Arvind Kejriwal Wife Sunita Kejriwal News: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா, டெல்லி ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், தெலங்கானாவின் மேலவை உறுப்பினரும் அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான கே. சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா என பல தலைவர்கள் கைதாகி வந்த நிலையில், சமீபத்தில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். 

ரூ.100 கோடி வரையில் ஊழல் செய்திருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் மேல் மீது அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த மார்ச் 21ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில், 7 நாள்கள் கழித்து நேற்று நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், அவரை நான்கு நாள்கள் நீதிமன்ற காவலில் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் நீடிக்கிறார். 

முதல்வராக நீடிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிடும்படி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது. இதன்மூலம், அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் இருந்தாலும் தொடர்ந்து முதலமைச்சராக செயல்படுவார் என தெரிகிறது. இந்திய வரலாற்றிலேயே அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட பின்னரும் முதல்வர் பதவியில் நீடிப்பது இவர்தான். 

மேலும் படிக்க | குண்டர்-அரசியல்வாதி முக்தார் அன்சாரியின் மரணம் நாடாளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

சுனிதா கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ

இது ஒருபுறம் இருக்க, அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது கண்டித்து எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி பெரும் போராட்டத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லியில் ஏற்பாடு செய்திருக்கிறது. ஆம் ஆத்மி தொண்டர்கள் தலைநகரின் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலும் இன்று வீடியோ வழியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். Kejriwal ko aashirwad என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரத்தில் வாட்ஸ்அப் எண் பகிரப்பட்டு, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்காக மெசேஜ் அனுப்பும்படி கோரிக்கை வைத்துள்ளார். இதில், சுனிதா கெஜ்ரிவால் மீது புதிய வெளிச்சமும் பாய்ந்துள்ளது. 

மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டு

இந்நிலையில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அரவிந்த் கெஜ்ரிவால் குறித்தும், அவர் மனைவி குறித்தும் கருத்து தெரிவத்துள்ளார். அதில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்னும் குறைவான காலமே உள்ளதாகவும், விரைவில் அவரின் முதல்வர் பொறுப்பு நிறைவடைய இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அவர்,"அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி அவருடன் வருவாய் துறையில் பணியாற்றியவர் மட்டுமில்லை. அவர் பலரையும் ஓரங்கட்டி உள்ளார். இப்போது அவர் அந்த உயர் பதவியை (முதலமைச்சர் பதவியை) அடைய தயார் ஆகி வருகிறார். 

அமலாக்கத்துறையின் சம்மனுக்கு ஒன்பது முறை அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளிக்கவில்லை. அதன்பின், அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரின் வீட்டுக்குச் சென்றார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்னும் கொஞ்சம் நாள்களே இருக்கிறது" என்றார். மேலும், வரும் மார்ச் 31ஆம் தேதி இந்தியா கூட்டணி நடத்த உள்ள போராட்டம் குறித்து கேட்டபோது,"அவர்களின் காலம் முடிந்துவிட்டது. அவர்களின் கடந்த காலத்தை குறித்துதான் பேச வேண்டும்" என்றார். 

யார் இந்த சுனிதா கெஜ்ரிவால்?

அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவாலும் முன்னாள் இந்திய வருவாய் சேவைகள் (Indian Revenue Service IRS) அதிகாரி ஆவார். இவர் வருமான வரித்துறையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். போபாலில் நடந்த பயிற்சி நிகழ்வில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். சுனிதா 1994 பேட்ச், அரவிந்த் கெஜ்ரிவால் 1995 பேட்ச் ஆவார். 

மேலும் படிக்க | உடனே ரூ.1,700 கோடி செலுத்துங்க... காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News