விவசாயி தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் நலத் திட்டங்கள் அறிவிப்பு

இந்த ஆண்டு மத்தியில் மக்களவை தேர்தல் வர உள்ளதால், இன்று இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்கிறது மத்திய அரசு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2019, 03:37 PM IST
விவசாயி தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் நலத் திட்டங்கள் அறிவிப்பு title=

12:36 01-02-2019
தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு இனி முழு வரி விலக்கு அளிக்கப்படும் என பியூஷ் கோயல் அறிவிப்பு


12:06 01-02-2019
வரி செலுத்துவோர் எண்ணிக்கை 80 சதவீதமாக அதிகரிப்பு. 2013 - 14 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் வரி வருவாய் 12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வரி செலுத்துவது எளிமை ஆக்கப்பட்டதால் தான் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடுத்தர வர்க்க மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்க அரசு முடிவெடுத்தது.


12:05 01-02-2019
அருணாச்சலப்பிரதேசத்தில் விமானப் போக்குவரத்து அறிமுகம் செய்யப்படும்


12:05 01-02-2019
மொபைல் இணைப்பில் இணைய வசதியை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்தியா 


12:04 01-02-2019
ரயில்வே துறைக்கு மூலதன ஆதரவாக சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க திட்டம். முதன்முறையாக மேகாலயா, மிசோரம், திரிபுரா ஆகிய பகுதிகளுக்கு ரயில் இணைப்பு. வடகிழக்கு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு 21 சதவீதம் அதிகரிப்பு


11:58 01-02-2019
உடான் திட்டத்தின் கீழ் சாமானியரும் விமானப்பயணம் மேற்கொள்ள முடிகிறது. சூரிய சக்தி மின்சார உற்பத்தி 10 மடங்காக அதிகரித்துள்ளது. பெரம்பூர் ஐ சி எப் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்ட அதிவிரைவு ரயில் வந்தே பாரத் என்று பெயரிடப்பட்டு தில்லிக்கும் - வாரணாசிக்கும் இடையே இயக்கப்படும். 


11:57 01-02-2019
உலகிலேயே அதிவேகமாக நெடுஞ்சாலைகளை அமைக்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நாள் ஒன்றுக்கு 27 கிலோமீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன.


11:55 01-02-2019
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. சிறு, குறு தொழில் நிறுவனங்களில் இருந்து அரசின் கொள்முதல் 25 சதவீதம் அளவுக்கு உள்ளது, இதில் மகளிர் நடத்தும் நிறுவனங்களில் இருந்து 3 சதவீத அளவுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.


11:55 01-02-2019
ராணுவ சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு அளிக்கப்படும். அதற்க்காக ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு 3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பு என பியூஷ் கோயல் அறிவிப்பு


11:52 01-02-2019
முத்ரா திட்டத்தின்கீழ் பயன் பெற்றவர்களில் 70 சதவீதம் பேர் மகளிர். மகப்பேறு திட்டத்தின்கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி. முத்ரா திட்டத்தின்கீழ் 7.23 லட்சம் கோடி ரூபாய்  கடன் வழங்கப்பட்டுள்ளது திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.


11:46 01-02-2019
உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆறுகோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என பியூஷ் கோயல் தெரிவித்தார்.


11:45 01-02-2019
வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் உயிரிழக்க நேரிட்டால் ஆறு லட்சம் ரூபாய் நிதியுதவி. அதேபோல அங்கன்வாடி மற்றும் ஆஷா திட்டத்தின்கீழ் பணிபுரிவோருக்கான மதிப்பூதியம் 50 சதவீத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்க திட்டம்.


11:43 01-02-2019
வயதானவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்  அறிவிப்பு. ஷிரம் யோகி என்ற பெயரிலான திட்டத்தின்கீழ் முதியோருக்கு ஓய்வூதியம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஷிரம் யோகி திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, இந்த திட்டத்தின்கீழ் மாதம் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும்.


11:42 01-02-2019
தேசிய பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்கள் வாங்கிய வேளாண் கடனில் 2 சதவீத வட்டித் தள்ளுபடி செய்யப்படும் என பியூஷ் கோயல் அறிவிப்பு


11:41 01-02-2019
மீன்வளர்ப்புக்கு தனித்துறை அமைக்கப்படும். பசுப்பாதுகாப்புக்கு தேசிய காமதேனு திட்டம் அறிவிப்பு. கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்புத் துறையில் கடன்களை உரிய காலத்தில் திருப்பி செலுத்துவோருக்கு 3 சதவீத வட்டி சலுகை அளிக்கப்படும்.


11:32 01-02-2019
ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் விவசாயிகள் சம்மான்நிதித் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் இரண்டு ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் பயனடையலாம். இந்தத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ஏழை விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஆறாயிரம் ரூபாய் நேரடி மானிய வங்கிப் பரிமாற்ற அடிப்படையில் வழங்கப்படும். அறுவடைக்கு முந்தைய காலக் கட்டத்தில் இந்த திட்டம் விவசாயிகளுக்கு தேவைப்படும் நிதியுதவியை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


11:29 01-02-2019
பிரதமரின் பொது சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 10 லட்சம் நோயாளிகள் பயனடைந்துள்ளனர். - பியூஷ் கோயல்


11:28 01-02-2019
நாடு முழுவதும் 21 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்க நிலையிலோ அல்லது செயல்பாட்டு நிலையிலோ உள்ளன - பியூஷ் கோயல் தெரிவித்தார்


11:28 01-02-2019
மார்ச் 2019-க்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டும் - பியூஷ் கோயல் அறிவிப்பு


11:25 01-02-2019
2019-20 இடைக்கால பட்ஜெட்: உலகின் மிகப்பெரும் சுகாதார காப்பீடு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. - பியூஷ் கோயல்


11:24 01-02-2019
2019-20 இடைக்கால பட்ஜெட்: சவுபாக்யா திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு - பியூஷ் கோயல்


11:24 01-02-2019
143 கோடி எல்ஈடி விளக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. - பியூஷ்கோயல்


10:56 01-02-2019
2019-20 இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 


10:49 01-02-2019
2019 இடைக்கால பட்ஜெட்டில் விவசாயம், ரியல் எஸ்டேட், வங்கித்துறை ஆகியவற்றிற்கான பெரிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.


10:46 01-02-2019
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் குறித்து விவசாய மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறுகையில்: கடந்த ஐந்து வரவுசெலவுத் திட்டம்(பட்ஜெட்) விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. அரசாங்கத்தின் ஆறாவது பட்ஜெட்டான இடைக்காலப் பட்ஜெட்டும் விவசாயிகளின் நன்மைக்காக இருக்கும் எனக் கூறியுள்ளார். 


10:44 01-02-2019
இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ஒருங்கிணைந்த முயற்சி, ஒன்றுபட்ட வளர்ச்சி என்பதே மத்திய அரசின் குறிக்கோள் ஆகும். அப்படி தான் பட்ஜெட் இருக்கும் என கூறியுள்ளார்.

 


10:14 01-02-2019
இன்று காலை 11 மணிக்கு இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

 


மக்களவை தேர்தல் வர உள்ளதாலும், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. ஆனால் இடைக்கால பட்ஜெட்டில் பெரும்பாலும் முக்கிய அறிவிப்பு மற்றும் சலுகைகள் இருக்காது. அதையும் மீறி மோடி அரசாங்கத்தின் பட்ஜெட் மீது அனைவரின் கவனம் உள்ளது.

இன்று தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்காலப் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பதிலாக ரயில்வே துறை அமைச்சராக உள்ள பியுஷ் கோயல் தாக்கல் செய்வார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதால், அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் இடைக்கால நிதி அமைச்சராக பியுஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஏற்கனவே பியுஷ் கோயல் பொதுத்துறை வங்கி தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். நாடாளுமன்றம் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரைநிகழ்த்தினார். இந்த கூட்டத்தொடர் வருகிற 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  

இந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் இருக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். குறிப்பாக நடுத்தர வர்க்கம் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு வரம்பை இரட்டிப்பாக்கலாம் என கூறப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வழங்குவதில் சில சலுகைகள் அறிவிக்கப்படலாம். இடைக்கால பட்ஜெட்டில் குறைந்த வருமானம் பெறுவோருக்கும் சலுகைகள் அளிக்கப்படும் எனத்தெரிகிறது. குறைந்த வருமானம் பெறும் நபர்கள் வீடு வாங்குவதற்கு கூடுதல் மானியம் கிடைக்கும் எனவும் தகவல்கள் வந்துள்ளது. விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டாலும், ரயில் கட்டணங்கள் உயர வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Trending News