ஆதார் தொடர்பான வழக்கில் தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியது.
அதில், தனியார் நிறுவனங்கள் ஆதார் கட்டாயம் என நிர்பந்திக்கக் கூடாது என்று, ஆதார் சட்டத்தின் 57-வது பிரிவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் கல்வியில் ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது. நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளுக்கும், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது. அதேபோல செல்போன் இணைப்பு, வங்கிக்கணக்கு ஆகியவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை. ஆதார் இல்லையென்றாலும் அவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்க வங்கிகள் அனுமதிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இனி வாடிக்கையாளர்களிடம் கேட்கப்படும் ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்துவதற்காக 15 நாட்களுக்குள் செயல்திட்டம் ஒன்றை அளிக்குமாறு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுக்குறித்து சுற்றறிக்கை அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.