கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளனவா? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தபா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை..!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி 4 தேர்வுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மாணவர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கு முதன்மை வாயிலாக உள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 9398 பேரை தேர்வு செய்வதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி தொகுதி 4 தேர்வுகள் நடத்தப்பட்டன. இராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் இந்த தேர்வுகளை எழுதிய 99 பேர் இடைத்தரகர்களின் உதவியுடன் முறைகேடுகளை செய்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக இடைத்தரகர்கள் உதவியுடன் போட்டியாளர்கள் செய்துள்ள தகிடுதத்தங்கள் குறித்த தகவல்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியளிக்கின்றன.
இடைத்தரகர்கள் வழங்கிய யோசனைப்படி, இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்த இவர்களுக்கு, ஏற்கனவே திட்டமிட்டவாறு எழுதிய சில மணி நேரங்களில் அழியும் தன்மை கொண்ட மை நிரப்பப்பட்ட பேனா வழங்கப்பட்டுள்ளது. அதனால் டிக் செய்யப்பட்ட விடைகள் சில மணி நேரங்களில் அழிந்தவுடன், வேறு இடத்தில் வைத்து சரியான விடைகளை எழுதி, பிற விடைத்தாள்களுடன் இவர்களின் விடைத்தாள்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த இரு நகரங்களின் தேர்வு அதிகாரிகளாக பணியாற்றிய வட்டாட்சியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் வந்த 36 மோசடியாளர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரும் வாழ்நாள் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை எழுத தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4 தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தவுடனேயே அது பற்றி விசாரணை நடத்தி, அனைத்து உண்மைகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளிக்கொண்டு வந்தது பாராட்டத்தக்கது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆணையிடப் பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. ஆனால், தொகுதி 4 தேர்வுகளைத் தவிர வேறு எந்த தேர்வுகளிலும், இராமேஸ்வரம், கீழக்கரை தவிர வேறு எந்த மையங்களிலும் முறைகேடுகள் நடைபெறவில்லை என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நற்சான்று அளித்திருப்பது தான் ஐயத்தை ஏற்படுத்துகிறது.
டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4 தேர்வுகளில் முறைகேடு செய்வதற்கான ஏற்பாடுகள் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்துள்ளன. ஆனாலும், இந்த முறைகேட்டை ஆணையம் கண்டுபிடிக்கவில்லை. தேர்வு எழுதிய மாணவர்களில் ஒரு பிரிவினர் தான் கண்டுபிடித்துள்ளனர். தேர்வு முடிவடைந்த சில மணி நேரங்களில் விடைத்தாள்கள் மையத்திலிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்; ஆனால், இடைத்தரகர்களின் உதவியுடன் மோசடி மாணவர்களின் விடைத்தாள்கள் மட்டும் அகற்றப்பட்டு, சரியான விடைகள் எழுதப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து எதுவுமே தெரியாமல் அரசுப் பணியாளர் தேர்வாணையம் இருந்திருக்கிறது என்றால், அதன் அலட்சியத்தை என்னவென்று சொல்வது?
இதற்கு முன் இதே மையங்களில் இரண்டாம் தொகுதி தேர்வெழுதிய பலர் இதே போல் முறைகேடு செய்து பணியில் சேர்ந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தொகுதி 1 தேர்வுகள் குறித்தும் ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை குறித்தெல்லாம் எந்த விசாரணையும் நடத்தாமல், அவற்றில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று மூடி மறைக்க அரசு பணியாளர் தேர்வாணையம் முயல்வது ஏன்?
இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே தமிழகத்தில் அரசு வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் மிகக்குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகளுக்காக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளைத் தான் மாணவர்கள் நம்பியிருக்கின்றனர். ஆனால், அந்தத் தேர்வுகளிலும் இந்த அளவுக்கு முறைகேடுகள் நடப்பது பெரும் அநீதி ஆகும். இது ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் அரசு வேலை கனவை முளையிலேயே சிதைத்து விடும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளும் மிகவும் நேர்மையாக நடத்தப்படுகின்றன என்ற நம்பிக்கையை மாணவர்கள் மத்தியில் விதைக்க வேண்டியது தான் அவசரமான பணியாகும். இதற்காக போட்டித் தேர்வு நடத்தும் முறைகளை ஆணையம் வலுப்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளனவா? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்த அரசு பணியாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும்.