ஏர் இந்தியா விமான நிறுவன பங்குகளை விற்கும் முடிவினை தற்போது மத்திய அரசு ஒத்திவைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
வரும் ஆண்டில் பொதுத் தேர்தலினை சந்திக்கவுள்ளதால் இந்த முடிவு மேற்கொள்ளப் பட்டதாகத் தெரிகிறது. மேலும் தேவைக்கேற்ப ஏர் இந்தியா செயல்பாடுகளுக்கு முதலீட்டினை மேற்கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
கடும் நிரி இழப்பினை சந்தித்து வரும் ஏர் இந்தியா விமான நிறுவனம் கடன் சுமையினை சமாளிக்க அதன் 76% பங்குகளை விற்பனை செய்ய முடிவுசெய்தது. எனவே அதன் ஐந்து துணை நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை விற்க மத்திய அமைச்சரவைக் குழு, ஒப்புதல் அளித்தது. எனினும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இதனையடுத்து நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தற்காலிக நிதி அமைச்சர் பியுஷ் கோயல், விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் விமானப் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஏர் இந்தியா நிறுவனம் செயல்பாட்டு லாபத்தில் இயங்கி வருகிறது. எனினும் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் நிதிநிலைமை மோசமாக உள்ளது. எனவே இதிலிருந்து மீள அனைத்து வழிகளிலும் செலவுகளைக் கட்டுப்படுத்துவது என கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டது.
இந்நிலையில் நிதி தட்டுப்பாட்டினை சமாளிக்க புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக ஏர் இந்தியா நிறுவனம், முதற்கட்டமாக வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான விடுதி செலவினை குறைக்க திட்டமிட்டுள்ளது.
முன்னதாக ஊழியர்களுக்கு 5 நட்சத்திர விடுதிகளில் அறை வழங்கப்பட்ட நிலையில் தற்போது 3 நட்சத்திர விடுதிகளில் அறை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதேப்போல் முன்னதாக ஊழியர்களுக்கு தனி அறை வழங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அறைகளை சக ஊழியர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
எனினும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனியே அறை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையானது 2017-ஆம் ஆண்டிற்கு பின்னர் இணைந்த ஊழியர்களுக்கு உடனடியாக அமல் படுத்தப்படும் எனவும், 2017-ஆம் ஆண்டிற்கு முன்னர் இணைந்த ஊழியர்களுக்கு படிபடியாக அமல் படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.10 கோடி அளவிற்கு செலவினத்தை குறைக்க முடியும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறைக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி ஏர் இந்தியா 3000 கேபின் ஊழியர்களை கொண்டுள்ளது, இதில் 1400 பேர் நிரந்தர ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.