CRPF கட்டுப்பாட்டு மீது பயங்கரவாத தாக்குதல், ஜெய்ஷ்-ஈ-முகமதுக்கு ஆதரவு அளிப்பதற்காக செய்த செயல் என MEA பாகிஸ்தானைக் குறை கூறுகிறது!
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களின் வாகன அணிவகுப்பில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் இருந்து ஸ்ரீநகருக்கு பாதுகாப்பு படை வீரர்கள் 70 வாகனங்களில் சென்றனர். அந்த வாகன அணிவகுப்பு புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தின் அருகே சென்றது. அப்போது எதிரே மெதுவாக வந்த காரில் இருந்த பயங்கரவாதி, வாகன அணிவகுப்பில் வந்த இரு பேருந்துகளுக்கு இடையில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதி வெடிக்க வைத்தான். இதில் பாதுகாப்பு படை வாகனங்கள் வெடித்து சிதறின.
வாகனத்தில் பயணம் செய்த வீரர்களில் 20 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் சாலையில் விழுந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் காயமடைந்து துடித்துக் கொண்டிருந்த வீர ர்களை குறி பார்த்து துப்பாக்கியால் சுட்டனர். இதனை கண்டதும், அணி வகுப்பில் சென்ற ஏனைய வாகனங்களும் நிறுத்தப்பட்டன. அதில் இருந்து வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.
பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து தகவல் அறித்ததும், கூடுதல் படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர். தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி யார் என்பது குறித்து பாதுகாப்பு படை நடத்திய விசாரணையில், காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் கார்போரா என்ற ஊரைச் சேர்ந்த அதில் அகமது தார் என்பவனே தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
பாகிஸ்தானின் பின்னணியில் செயல்படும் ஜெய்சே இ முகமது என்ற பயங்கரவாத இயக்கம் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளது. தாக்குதலை தங்கள் இயக்கமே நடத்தியதாக அந்த அமைப்பின் சார்பில் காஷ்மீர் செய்தி நிறுவனமான ஜி.என்.எஸ்.சுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென அஞ்சப்படுகிறது. இந்நிலையில் தாக்குதல் குறித்த விசாரணை உடனடியாக தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஐ.ஜி சுல்பீகர் ஹாசன் கூறியுள்ளார். பாதுகாப்பு படை உயரதிகாரிகளும் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு படை வீர ர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது என்றும் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார். இதே போன்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு மறக்க முடியாத பாடத்தை மத்திய அரசு கற்பிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீநருக்கு வெள்ளிக்கிழமை சென்று நிலவரம் குறித்து ஆய்வு நடத்த உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும் அவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குநர் ஜெனரல் பாட்நாகருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.