கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா மடஹள்ளி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கும்பகல்லு கிராமத்தில் உள்ள ஸ்ரீராமகுன்று மலையில் அதேப்பகுதியை சேர்ந்த மகேந்திரப்பாவுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கேரளாவை சேர்ந்த அக்கீம் என்பவர், அரசின் அனுமதி பெற்று குத்தகை அடிப்படையில் கல்குவாரி நடத்தி வருகிறார்.
இந்த கல்குவாரியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்த கல்குவாரியில் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு, கற்களாக மாற்றி பொக்லைன் எந்திரங்கள் மூலம், டிராக்டர் லாரிகளில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல கல்குவாரியில் பாறை வெடி வைத்து தகர்க்கப்பட்டு கற்களை உடைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. மேலும் கற்களை ஏற்றி செல்வதற்காக ஏராளமான டிப்பர் லாரிகளும், டிராக்டர்களும் அந்தப்பகுதியில் அணிவகுத்து நின்றன. இந்நிலையில் காலை 11.30 மணி அளவில் கல்குவாரியில் வெடி வைக்கப்பட்டது.
அப்போது வெடியின் அதிர்வால் குன்றின் மேல் இருந்து பெரிய பாறாங்கல் ஒன்று எதிர்பாராதவிதமாக உருண்டு கீழே விழுந்தது. இதனால், கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் பாறாங்கல்லின் அடியில் சிக்கி உடல் நசுங்கி மண்ணுக்குள் புதைந்தனர். மேலும், டிப்பர் லாரிகளும் கவிழ்ந்து நசுங்கியது. இந்த கோர விபத்தில் மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் குண்டலுபேட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர். 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சாம்ராஜ்நகர், மைசூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்து இருப்பதால் அவர்களின் உடல்களை உடனடியாக மீட்க முடியவில்லை. இதனால் சம்பவம் நடந்த இடத்துக்கு பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் மண்ணுக்குள் புதைந்து பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு படையினர், அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் மண்ணுக்குள் புதைந்து இருந்த 6 பேரின் உடல்கள் நசுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அந்த உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கோர விபத்து சாம்ராஜ்நகர் மட்டுமின்றி கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த விபத்தில் டிப்பர் லாரிகள், டிராக்டர்கள், பொக்லைன் எந்திரங்கள் நொறுங்கி நாசமாகின.
மேலும் படிக்க | அடக்கடவுளே..! ஒரு எலுமிச்சம் பழம் 33 ஆயிரமா?
இதுகுறித்து குண்டலுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து கலெக்டர் சாருலதா சோமல் நிருபர்களிடம் கூறுகையில், கல்குவாரியில் நடந்த இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்திருக்கலாம். இதில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர், விவரம் இன்னும் கிடைக்கவில்லை. மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேரின் பெயர், விவரம் தெரியவந்துள்ளது. அவர்கள் கேரளாவை சேர்ந்த அஸ்ரப், பிரான்சிஸ் என்பது தெரிந்தது. மற்றவர்களின் பெயர், விவரம் தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்றார்.
மேலும் படிக்க | கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR