சமூக ஊடகங்களை நல்லாட்சிக்கான ஆயுதமாக பயன்படுத்தப்படலாம்: மோடி

சமூக ஊடகங்களை நல்லாட்சிக்கு ஒரு "நல்ல ஆயுதமாக" பயன்படுத்துவதற்கு ஆதரவாக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்!

Last Updated : Sep 26, 2019, 09:36 AM IST
சமூக ஊடகங்களை நல்லாட்சிக்கான ஆயுதமாக பயன்படுத்தப்படலாம்: மோடி title=

சமூக ஊடகங்களை நல்லாட்சிக்கு ஒரு "நல்ல ஆயுதமாக" பயன்படுத்துவதற்கு ஆதரவாக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்!

நியூயார்க்கில் நடைபெற்ற புளும்பெர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு உரையாற்றினார். பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களிடையே பேசிய அவர், வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக கார்பரேட் வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், முதலீடு செய்வதற்கு இந்தியா பொன்னான வாய்ப்பை அளிப்பதாக கூறினார். உலகில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு சூழலை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் இந்தியாவிற்கு வருமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். டெமாக்ரசி, டெமாக்ரபி, டிமேண்ட், டெசிசிவ்னஸ் என்ற 4டி இந்தியாவில் இருப்பதால், முதலீட்டாளர்களுக்கு நம்பகமான மற்றும் தனித்துவமான நாடாக இந்தியா விளங்குவதாக பிரதமர் தெரிவித்தார். 

மேலும், சமூக வலைத்தளங்கள், சக்திவாய்ந்த ஜனநாயக சாதனமாக மாறி இருக்கின்றன. இந்த சாதனங்களை நல்லாட்சிக்கான நல்ல ஆயுதமாக ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம். நான் நீண்ட காலமாக சமூக வலைத்தளங்களில் தீவிர பங்காற்றி வருகிறேன். குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது, சமூக வலைத்தளத்தில் வந்த விபத்து பற்றிய செய்தியை பார்த்து, அரசு எந்திரத்தை முடுக்கி விட்டேன். வெள்ள பாதிப்பின்போது, நடவடிக்கை எடுக்க பயன்படுத்திக்கொண்டேன். இதற்காக முறைப்படி அறிக்கை விட வேண்டியது இல்லை என அவர் தெரிவித்தார். 

உலக நாடுகள் எதிர்நோக்கும் மனிதவளம் இந்தியாவில் உள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், ஏதேனும் இடைவெளி எந்த இடத்தில் வந்தாலும் தனிப்பட்ட முறையில் பாலமாக இருந்து செயல்படுவேன் என்றும் பிரதமர் உறுதி அளித்தார். குடிமக்களுக்கு ஏற்ற விதத்தில் இந்தியாவில் நகரங்கள் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் நவீனமாக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்ட மோடி, நகரமயமாக்கலில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் இந்தியாவிற்கு வருமாறு கேட்டுக்கொண்டார். முன் எப்போதும் இல்லாத விதத்தில் பாதுகாப்பு துறையிலும் தனியார் முதலீடுகளை இந்தியா அனுமதிப்பதால், முதலீடுகளை எதிர்நோக்கி இருப்பதாக கூறினார். தொழில் உலகத்தையும், செல்வத்தைப் பெருக்குவதையும் இந்திய அரசு மதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமது தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று 4 மாதங்களே ஆகியிருப்பதாக தெரிவித்த மோடி, தங்களுடன் இணைந்து நீண்ட தூரம் பயணிக்க சர்வதேச தொழில் சமூகத்திடம் இருந்து கூட்டாளி தேவை என்றும் கூறினார். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் கோடி பொருளாதாரத்தை இந்தியா எட்டுவதற்கு இலக்கு நிர்ணயித்து இருப்பதாக கூறிய பிரதமர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 175 கிகாவாட் மின் உற்பத்தில் இலக்கில், 120 கிகாவாட் மின் உற்பத்தி எட்டப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தார். நவீன உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி டாலரை செலவிட இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த 5 ஆண்டுகளில் 28600 கோடி டாலர் மதிப்பில் அன்னிய நேரடி முதலீடுகளை இந்தியா பெற்று இருப்பதாகவும், முந்தைய 20 ஆண்டுகளில் அதில் 50 சதவீதம் மட்டுமே பெற்றப்பட்டது என்றும் சுட்டிக்காட்டினார். ஜனநாயகம், அரசியல் நிலைத்தன்மை, சுதந்திரமான நீதித்துறை போன்றவை இந்தியாவில் இருப்பதால் முதலீட்டுக்கு உத்தரவாதம் இருக்கிறது என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

 

Trending News