Bhajan Lal Sharma: ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன் லால் சர்மா தேர்வு! 9 நாட்கள் இழுபறிக்கு முடிவு

Rajasthan New CM Bhajan Lal Sharma: ராஜஸ்தானின் புதிய முதல்வராக முதல் முறையாக சங்கனேர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ-வான பஜன் லால் சர்மா பதவியேற்பார் என்று பாஜக அறிவித்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 12, 2023, 05:33 PM IST
  • ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வராக பஜன் லால் சர்மா தேர்வு.
  • பஜன் லால் சர்மா, ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபியுடன் நெருங்கிய தொடர்புடையவர்.
  • பஜன் லால் சர்மாவின் சொத்து மதிப்பு ரூ.1.5 கோடி, மொத்த வருமானம் ரூ.11.1 லட்சம்.
Bhajan Lal Sharma: ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன் லால் சர்மா தேர்வு! 9 நாட்கள் இழுபறிக்கு முடிவு title=

CM of Rajasthan: ராஜஸ்தானில் புதிய முதல்வர் யார் என்பது குறித்த சஸ்பென்ஸ் தற்போது தீர்ந்தது. சங்கனர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆன பஜன் லால் சர்மா, ராஜஸ்தானின் புதிய முதல்வராகிறார். டெல்லி பாஜக தலைமை நியமித்த மேலிட பார்வையாளர்கள் சட்டப்பேரவைக் கூட்டத்திற்குப் பிறகு, பஜன் லால் சர்மாவின் பெயரை முடிவு செய்துள்ளனர். கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. ராஜஸ்தானின் பரத்பூரில் வசிக்கும் பஜன் லால் சர்மா (Bhajan Lal Sharma) , இந்த அமைப்பில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். மாநில பொதுச்செயலாளராக பணியாற்றி வருகிறார். அதாவது முதல் முறையாக எம்எல்ஏ-வான பஜன் லால் சர்மா, 4 முறை மாநில பொதுச் செயலாளராக இருந்துள்ளார். ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபியுடன் நெருங்கிய தொடர்புடையவர்.

சங்கனர் தொகுதி MLA பஜன் லால் சர்மா

சங்கனர் தொகுதி பாஜகவின் கோட்டை என்று சொல்லலாம். அந்த தொகுதியில் தான் பஜன் லால் சர்மா வெற்றி பெற்றார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முக்கியப் பங்காற்றுவதைக் கருத்தில் கொண்டு அவருக்கு முதல்வர் பதவி என்ற மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பஜன் லால் சர்மாவின் சொத்து மதிப்பு

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், 56 வயதான சர்மா முதுகலை பட்டதாரி. ரூ.43.6 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகள் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் அடங்கிய அவரது மொத்த அறிவிக்கப்பட்ட சொத்து மதிப்பு ரூ.1.5 கோடி. அறிவிக்கப்பட்ட மொத்த வருமானம் ரூ.11.1 லட்சம், இதில் ரூ.6.9 லட்சம் சொந்த வருமானமாகும்.

மேலும் படிக்க - தேர்தல் அரையிறுதி வெற்றி.. 2024 லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமா? இதுவரை நடந்தது என்ன?

லோக்சபா தேர்தல் 2024 குறி வுக்கும் பாஜக

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் முதல்வரின் பெயரை பாரதிய ஜனதா கட்சி (Bharatiya Janata Party) அறிவித்துள்ளது. மோகன் யாதவுக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் பதவியும், சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் பதவி விஷ்ணு தேவ் சாய்க்கும் வழங்கப்பட்ட நிலையில், ராஜஸ்தானின் முதல்வராக பஜன்லால் சர்மா பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. மறுபுறம், லோக்சபா தேர்தல் குறித்தும், பா.ஜ., தனது வியுகத்தை தெளிவுபடுத்தி உள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் போட்டிக்கு முற்றுப்புள்ளி

ராஜஸ்தான் தேர்தல் போரில் வெற்றி பெற்ற பிறகு, பாஜகவின் முன் இருந்த மிகப்பெரிய சவால் யாரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் தற்போது முதல்வர் பதவிக்கான போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் பல பெயர்கள் ஓடிக்கொண்டிருந்தன. இந்தப் பட்டியலில் முதல் பெயர் வசுந்தரா ராஜே. அவர் ஏற்கனவே ராஜஸ்தானின் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளார். இதுதவிர ராஜஸ்தானில் இந்துத்துவா முகமான பாபா பாலக்நாத்தின் பெயரும் பேசப்பட்டது. கஜேந்திர ஷெகாவத், சிபி ஜோஷி, தியா குமாரி மற்றும் ராஜ்வர்தன் ரத்தோர் போன்ற பெயர்களும் போட்டியில் இருந்தன.

முதல்வர் பெயரை இறுதி செய்த மேலிட மேற்பார்வையாளர்கள்

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வினோத் தாவ்டே, சரோஜ் பாண்டே ஆகியோரை ராஜஸ்தானின் மேலிட பார்வையாளராக பாஜக மேலிடம் அமைத்தது. இன்று பிற்பகல் மூன்று தலைவர்களும் ஜெய்ப்பூர் வந்து எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினர். இன்று பிற்பகல் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வசுந்தரா ராஜேவை நேரில் சந்தித்து பேசினார். மறுபுறம், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் ராஜ்நாத் சிங்குடன் தொலைபேசியில் பேசினார்.

115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பாஜக

ராஜஸ்தானில், முதல்வர் பதவிக்கான வேட்பாளரை குறிப்பிடாமல் பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் போட்டியிட்டது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அமோக பெரும்பான்மையை பெற்றது. அதே நேரத்தில் காங்கிரஸ் 69 இடங்களில் வெற்றி பெற்றது. 

மேலும் படிக்க - Rajasthan New CM: ராஜஸ்தான் புதிய முதல்வர் யார்? மோதும் வசுந்தரா ராஜே vs பாபா பாலக் நாத்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News