டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்ட போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் செங்கோல் கொடுக்கப்பட்டு நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகர் இருக்கை முன் செங்கோல் வைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்ற போது, நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவிடம், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், ஆட்சி மாற்றத்தைக் குறிக்கும் வகையில் இந்த செங்கோலை அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.கே.செளத்ரி மக்களவை சபாநாயகருக்கு, “மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல” என கடிதம் எழுதியுள்ளார். ஜனநாயகத்திற்கும், செங்கோலுக்கும் என்ன சம்மந்தம் என்று சமாஜ்வாடி கட்சி எம்பி கேள்வி எழுப்பி இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் 'செங்கோல்' விமர்சனத்திற்கு பதிலளித்த பாஜக, சமாஜ்வாதி கட்சி முன்பு ராமசரித்மனாஸை தாக்கி அவமதித்ததாகவும், இப்போது அவர்கள் இந்திய மற்றும் குறிப்பாக தமிழ் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியான செங்கோலை அவமதிப்பதாகவும் கூறினார்.
சௌத்ரியின் இந்த கடிதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹசாத் பூனாவல்லா இந்தியாவின் மற்றும் தமிழக கலாசாரத்தை சமாஜ்வாதி எம்.பி. அவமதித்துவிட்டதாகவும், செங்கோல் மன்னர் ஆட்சியின் அடையாளம் என்றால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து பிரதமர் நேரு, ஏன் அதனைப் பெற்றுக்கொண்டார்? மன்னாட்சியின் அடையாளத்தை அவர் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ஷெஹசாத் பூனவல்லா மேலும் கூறுகையில், “இந்திய கலாசாரத்தை இழிவுபடுத்த சமாஜ்வாதி கட்சி ஒருபோதும் தயங்கியதில்லை. தமிழகத்தை அவமதிக்கும் செங்கோலை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். தமிழகத்தின் செங்கோலை இழிவுபடுத்துவதை திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஏற்றுக் கொள்வார்களா? தமிழகத்திற்கு உரிய மரியாதை கிடைத்து வருவதை சமாஜ்வாதி கட்சி எதிர்க்கிறது. இவர்கள் வெளிப்படையாக இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரத்தை அவமதிக்கிறார்கள்." என்று தெரிவித்தார்.
சமாஜ்வாதி கட்சியை கண்டித்து பேசிய ராம் விலாஸ் பாஸ்வான் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிராக் பாஸ்வான், வரலாற்றுச் சின்னங்களை, மோசமாக சித்தரிக்க, காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் தலைமையிலான அரசுகளும் எப்போதும் தயங்கியதே இல்லை என்று விமரிசித்துள்ளார். மேலும், நேர்மறையான அரசியலை செய்ய தெரியாத இவர்கள், பிரிவினையை ஏற்படுத்துவதற்காகவே அரசியல் செய்யும் பழக்கம் கொண்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செங்கோலை அகற்றக் கோரிய சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் பாஜக எம்பிக்கள் சபாநாயகரிடம் முறையிட்டனர். அதன் அடிப்படையில் கோரிக்கை நிராகரிக்கப்படும் என பாஜக எம்பிக்களிடம் சபாநாயகர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
எதிர்க்கட்சிகளின் 'செங்கோல்' போராட்டம், நரேந்திர மோடி 3.0க்கு சவால் விடுவதற்கான அவர்களின் முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த அமர்வு தொடங்கிய முதல் நாளில், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் போன்ற உயர்மட்டத் தலைவர்கள் அரசியல் சாசன நகல்களை ஏந்தியவாறு நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காந்தி, யாதவ் உட்பட பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் செய்யும் போது அரசியலமைப்புச் சட்டத்தின் நகல்களை ஏந்திச் சென்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ