கத்தார் நாட்டுடன் 5 அரபு நாடுகள் தங்கள் தூதரக உறவை துண்டிப்பதாக நேற்று அறிவித்தது.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு கத்தார் மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக குற்றம் சாட்டி 5 அரபு நாடுகளான சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, அமீரகம், ஏமன் தங்கள் தூதரக உறவு துண்டித்தது. இதனால், இந்த 5 நாடுகள் கத்தாருடன் தங்களது விமான சேவைகள் மற்றும் கப்பல் சேவைகளையும் ரத்து செய்தது.
கத்தாரில் 26 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் ஆறரை லட்சம் பேர் இந்தியர்கள். கத்தாரில் இந்தியா ரூ.58 ஆயிரம் கோடி வர்த்தக முதலீடு செய்துள்ளது. தற்போது இந்நாட்டின் மீது அரபுநாடுகள் எடுத்துள்ள நடவடிக்கையால் அங்கு தங்கியிருக்கும் இந்தியர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அரபு நாடுகளுக்கு விமான பயணம் செய்யும் இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:-
கத்தாரில் 6 லட்சத்து 50 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் 2-க்கு 1 என்ற அளவில் அங்கு தங்கி பணிபுரிகின்றனர். அரபு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இப்பிரச்சினையில் அங்கு தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
அதே நேரத்தில் கத்தாரில் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை கண்டு பிடித்து மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது அரபு நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை. அது விரைவில் தீரும் என நம்புகிறேன்.
இப்பிரச்சினையால் கத்தாருடன் ஆன இந்தியாவின் உறவில் எந்தவித மாற்றமும் இல்லை. தொடர்ந்து உறவு நீடிக்கும் என்றார்.