பாகிஸ்தானின் கனவு பலிக்காது என ஐ.நா., பொதுச்சபைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
ஐ.நா., சபையில் பேசியதாவது:- உலகளவில் வறுமையும் சுகாதார பிரச்னைகளும் மிகப்பெரிய சவாலாக உள்ளன. இந்தியாவில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக துாய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தில் 2 லட்சம் பள்ளிகளில் 4 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
சர்வதேச யோகா தினத்தை உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல உதவிய ஐ.நா., சபைக்கு எனது நன்றிகள்.பயங்கரவாதம் மனித இனத்திற்கு எதிரானது. நாம் அனைவரும் இணைந்து பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஆதரித்துக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்.
பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி, ஆயுத உதவி கொடுத்து சொந்த நாட்டில் இடம் அளிப்பவர்களை உலக நாடுகள் கண்டு கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை அனைவரும் ஒன்றிணைந்து வேர் அறுக்க வேண்டும்.இந்தியாவில் பதான் கோட் தாக்குதல், யூரி ராணுவ முகாம் தாக்குதல் உட்பட பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் இந்தியா பல நிபந்தனைகளை விதிப்பதாக அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஐ.நா., சபையில் பேசி உள்ளார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்துகிறார். அதை ஏற்க முடியாது. என்ன நிபந்தனைகள் என்பதை அவர்தான் கூற வேண்டும்.
கண்ணாடி வீட்டிற்குள் இருந்து பிறர் மீது கல் எறிய கூடாது. காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான ஒரு பகுதி. அதில் எவ்வித மாற்றமும் எப்போதும் ஏற்படுத்த முடியாது. காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பறிக்க நினைக்கும் பாகிஸ்தான் கனவு ஒரு போதும் பலிக்காது என அவர் பேசினார்.