பயங்கரவாத வக்காலத்து வாங்குபவர்களுக்கு எதிர்க்கட்சி வாழ்விடம்: மோடி

தீவிரவாதத்திற்கு சாதகமாக கருத்து தெரிவிப்பவர்களின் புகலிடமாக எதிர்க்கட்சிகள் திகழ்வதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்!

Last Updated : Mar 22, 2019, 05:46 PM IST
பயங்கரவாத வக்காலத்து வாங்குபவர்களுக்கு எதிர்க்கட்சி வாழ்விடம்: மோடி title=

தீவிரவாதத்திற்கு சாதகமாக கருத்து தெரிவிப்பவர்களின் புகலிடமாக எதிர்க்கட்சிகள் திகழ்வதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்!

ராகுல்காந்திக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவரும், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் பிரிவு தலைவருமான சாம் பிட்ரோடா (Sam Pitroda) ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில்; பாகிஸ்தானில் பாலக்கோட்டில் தீவிரவாத முகாமை இந்திய விமானப்படை தாக்கியதில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி கேள்விகள் எழுந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் சொல்லிக் கொள்ளும்போது, சர்வதேச ஊடகங்களோ யாரும் கொல்லப்படவில்லை என கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தீவிரவாதத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானின் குடிமக்கள் அனைவரையும் குறைகூறுவது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சாம் பிட்ரோடா கருத்துகளை சுட்டிக்காட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,காங்கிரஸ் தலைவரின் நம்பகமான ஆலோசகர், இந்திய படைகளை சிறுமைப்படுத்தும் வகையில் காங்கிரசின் சார்பில் பாகிஸ்தான் தேசிய தினத்தை கொண்டாடத் தொடங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தீவிரவாத சக்திகளுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் தயாராக இல்லை என்ற, ஏற்கெனவே தேசமறிந்த உண்மையை காங்கிரஸ் ராஜ வம்சத்தின் விசுவாசி ஒப்புக்கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது புதிய இந்தியா என்றும், தீவிரவாதிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலின் பின்னணியில் சதி இருப்பதாக சமாஜ்வாதி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் கூறியிருப்பது பற்றியும் ட்விட்டரில் மோடி பதிவிட்டுள்ளார். தீவிரவாதத்திற்கு சாதகமாக கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் நமது படைகளை கேள்விக்குள்ளாக்குபவர்களின் புகலிடமாக எதிர்க்கட்சிகள் உள்ளன என பிரதமர் சாடியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு படைகளை எதிர்க்கட்சி மீண்டும் மீண்டும் சிறுமைப்படுத்துகிறது என்று கூறியுள்ள மோடி, எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளுக்காக அவர்களை மக்கள் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சிகளின் நடத்தைகளை 130 கோடி இந்தியர்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என்றும், படைகளின் பக்கம் இந்தியா உறுதியாக நிற்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

Trending News