லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மெகா கூட்டணி குறித்து தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் தனது கட்சியை சேர்ந்த ஒருவரையும் மந்திரியாக்க வில்லை எனக்கூறி காங்கிரஸ் கட்சி மீது கோபமாக இருந்தார். பிஜேபி மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சியுடன் தான் எங்கள் கூட்டணி இருக்கும். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சிகளுடன் வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி கிடையாது என அவர் தெளிவுப்படுத்தி விட்டார்.
அகிலேஷ் யாதவ் கூறுகையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மாநில பிராந்திய கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்க முயற்ச்சி செய்து வருகிறார். எனவே சந்திரசேகர் ராவை சந்திப்பதற்காக ஹைதராபாத் செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, அவர்களின் அமைச்சரவையில் சமாஜ்வாடி கட்சி சேர்ந்த ஒரு வேட்பாளர் கூட இல்லை. இதனால் நாங்கள் காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதேபோல பாஜக சாதி மற்றும் மதம் அடிப்படையில் ஓட்டு கேட்டார்கள். என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியும். எங்கள் கட்சியை குறித்து பிஜேபி நிறைய பொய்களை கூறியது. எங்களை பிற்படுத்தப்பட்டவர்கள் என்று கூறியது. இதற்காக நாங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
அகிலேஷ் யாதவ் இந்த அறிக்கைக்குப் பிறகு, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை தவிர்த்து மூன்றாவதாக அமையும் அணிக்கு இவர் செல்லக்கூடும் எனத் தெரிகிறது. மூன்றாவது அணி அமைக்கும் முனைப்பில் சந்திரசேகர் ராவ் ஈடுப்பட்டு வருகிறார் என்பது குறிப்பித்தக்கது.