Vizag-ல் 2வது கசிவு இல்லை.. மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றம்: AP போலீஸ்

விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் ஆலையில் வியாழக்கிழமை இரவு இரண்டாவது கசிவு ஏற்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை என்று ஆந்திர மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 8, 2020, 10:29 AM IST
Vizag-ல் 2வது கசிவு இல்லை.. மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றம்: AP போலீஸ் title=

ஆந்திர பிரதேசம்: விசாகப்பட்டினத்தில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் ஆலையில் வியாழக்கிழமை இரவு இரண்டாவது கசிவு ஏற்பட்டதாக வெளியான செய்தி உண்மை இல்லை என்று ஆந்திர மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆலையை சுற்றி உள்ள சுமார் 5 கி.மீ பரப்பளவில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர். தொழிற்சாலையிலிருந்து சில நீராவிகள் வெளியே வருவதை உள்ளூர்வாசிகள் பார்த்ததை அடுத்து, இந்த வதந்திகள் பரவி உள்ளது. இருப்பினும், இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை. ஆனாலும் எரிவாயு குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆலையில் இருந்து 5 கி.மீ சுற்றளவில் மக்களை வெளியேற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பலரும் சொந்தமாக வெளியேறத் தொடங்கியுள்ளனர். 1 கி.மீ சுற்றளவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் ஏற்கனவே காலையில் வெளியேற்றப்பட்டனர். மேலும் அப்பகுதியில் ஆம்புலன்ஸ் தயாராக உள்ளன தீயணைப்பு அதிகாரி சந்தீப் ஆனந்த் கூறியுள்ளார். 

பாதுகாப்பு காரணங்களுக்காக தீயணைப்பு அதிகாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், 10 தீயணைப்பு வாகனங்களும் இப்பகுதியில் உள்ளன என்றும் அவர் கூறினார்.

கோபாலபட்டினத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து இரண்டாவது கசிவு ஏற்பட்டதாக மாவட்ட தீயணைப்பு அதிகாரிகள் ஆரம்பத்தில் கூறியிருந்தாலும், காவல்துறை அதை மறுத்தது. 5 கி.மீ வரை மக்களை வெளியேற்றுவது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டு உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் தொடங்கிய எரிவாயு கசிவில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 350 பேர் நகரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றன. இறந்தவர்களில் ஆறு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் முதல் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர் அடங்குவார்கள்.

வென்டிலேட்டர் உதவியுடன் குறைந்தது 20 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதுதவிர, விசாகப்பட்டினத்தின் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் 246 பேர் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் பசுக்கள் மற்றும் எருமைகள் மற்றும் அவற்றின் கன்றுகள் உட்பட சுமார் 22 வீட்டு விலங்குகளும் கொல்லப்பட்டன. மேலும் சில விலங்குகள் சிகிச்சையில் உள்ளன.

வியாழக்கிழமை மாலை, ஆந்திர முதல்வர் ஜெகன் விசாகப்பட்டினத்தை அடைந்து மாவட்ட அதிகாரிகளுடன் எரிவாயு கசிவு குறித்து மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .1 கோடி இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார்.

வென்டிலேட்டர் ஆதரவில் இருப்பவர்களுக்கு தலா ரூ .10 லட்சம் இழப்பீடு கிடைக்கும் என்றும், ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ரூ .25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். முதன்மை கவனிப்பைப் பெற்று திருப்பி அனுப்பப்பட்டவர்களுக்கு ரூ .10,000 இழப்பீடு கிடைக்கும் என்று ஜெகன் கூறினார்.

விசாகப்பட்டினம் ரசாயன ஆலையின் உரிமம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால் அது ரத்து செய்யப்படலாம் என்று சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரி வியாழக்கிழமை பி.டி.ஐ. செய்தி ஊடகத்திடம் தெரிவித்தார்.

Trending News