பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் ஆக லார்ட் லூயிஸ் மவுண்ட் பேட்டன் பதவி வகித்தவர். இவரது மனைவியின் பெயர் எட்வினா.
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் எட்வினாவுக்கும் இடையில் ஆரம்பத்தில் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலில் மாறியது. இவர்கள் இருவரும் தங்களது காதல் உணர்வுகளை கடிதங்த்தின் மூலம் பரிமாறி கொண்டனர். பொது இடங்களிலும் ஜவஹர்லால் நேருவும் எட்வினாவும் மிக நெருக்கமாக காணப்பட்டதால் இந்த காதல் விவகாரம் வெளிப்படையாகவே இருந்தது.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் தனது கணவர் ,மற்றும் குழந்தைகளுடன் எட்வினா பிரிட்டன் நாட்டுக்கு சென்றார். அதன் பிறகும் இவர்கள் இருவரும் கடிதங்கள் மூலமாக தனது காதலை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், நேருவுக்கும் எட்வினாவுக்கும் இடையில் மிக ஆழமான காதல் இருந்ததாக எட்வினாவின் மகள் பமீலா ஹிக்ஸ் நீ குறிப்பிட்டுள்ளார்.
மவுண்ட் பேட்டன் வாழ்க்கையை மையமாக வைத்து அவர் எழுதியுள்ள புத்தகத்தில், ‘தனது உள்ளுணர்வு மற்றும் கல்வியறிவுக்கு ஏற்றதொரு துணைவராக நேருவை எனது தாயார் எட்வினா நேசித்தார். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் எவ்வளவு ஆழமாக நேசித்தனர்? ஒருவர்மீது மற்றவர் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தனர்? என்பதை நேருவின் கடிதங்கள் வாயிலாக நான் அறிந்து கொண்டேன்.
அவர்களின் உறவு மனதளவிலானது தானா? அல்லது, உடல் அளவிலானதுமா? என்பதை அறிந்து கொள்ள நான் ஆர்வமாக இருந்தேன். ஆனால், அவர்களுக்கு இடையில் நிகழ்ந்த கடித பரிமாற்றங்களை ஆய்வு செய்த பிறகு எனது ஆர்வத்தில் அர்த்தம் இல்லை என்பது புரிந்தது.
உடல்ரீதியான உறவு வைத்துக் கொள்ள அவர்கள் இருவருக்கும் நேரம் இருந்ததில்லை என்பதுடன் அவர்கள் எந்நேரமும் பணியாட்கள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நடுவில் வாழ்ந்துள்ளனர். இதை எனது தந்தை மவுண்ட் பேட்டனின் தலைமை உதவியாளரும் பின்னர் என்னிடம் உறுதிப்படுத்தினார்.
இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு புறப்படும்போது மரகதக்கல் பதித்த ஒரு மோதிரத்தை நேருவுக்கு பரிசளிக்க எனது தாயார் எட்வினா விரும்பினார்.
ஆனால், அதை நேரு ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதால் அதை அவரது மகள் இந்திராவிடம் அவர் அளித்தார். தனது பணத்தை பிறருக்கு அளித்து விடும் பழக்கம் கொண்ட நேருவுக்கு எப்போதாவது பொருளாதார ரீதியாக நெருக்கடி வந்தால், இந்த மோதிரத்தை விற்று அவரது பணக்கஷ்டத்தை தீர்க்குமாறு இந்திராவை எட்வினா கேட்டுக் கொண்டார்’ என அந்த புத்தகத்தில் பமீலா ஹிக்ஸ் நீ குறிப்பிட்டுள்ளார்.
மவுண்ட் பேட்டன் குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்ட வழியனுப்பு விழா விருந்தில், ’நீங்கள் எங்கெல்லாம் சென்றீர்களோ, அங்கெல்லாம் ஆறுதலையும், நம்பிக்கையயும், ஊக்கத்தையும் நீங்கள் விதைத்திருக்கிறீர்கள். அதனால், இந்திய மக்கள் உங்களை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டு அன்பு செலுத்தி வந்துள்ளனர். நீங்கள் எங்களை விட்டு பிரிந்து செல்வதை இந்திய மக்கள் மிகுந்த வருத்தத்துடன் பார்க்க வேண்டியுள்ளது’ என எட்வினாவிடம் நேரு கூறியதையும் பமீலா ஹிக்ஸ் நீ பதிவு செய்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு "Daughter of Empire: Life as a Mountbatten" என்ற தலைப்பில் இந்த புத்தகம் வெளியானது. தற்போது இந்த புத்தகம் இந்தியாவில் வெளியாகியுள்ளது.