மும்பை நகரிலும் அதையொட்டி அமைந்துள்ள நவி மும்பை, தாணே ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால், சாலை, ரயில் மற்றும் விமானச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களுக்கு அரசு அறிவித்துள்ளது.
லோயர் பரேல், தாதர், குர்லா, அந்தேரி, காட்கோபர், சையன், ஹிந்த்மாதா ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள், கிழக்கு மற்றும் மேற்கு விரைவு நெடுஞ்சாலைகள், சையன்-பன்வல் நெடுஞ்சாலை, எல்பிஎஸ் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதலே தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக முழங்கால் முதல் இடுப்பளவுக்கு நீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சிக்கி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தாதர், அந்தேரி, வோர்லி, குர்லா, சாகிநாகா, உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 20 மரங்கள் விழுந்துள்ளன. ஓரிடத்தில் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
கன மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக மும்பை விமான நிலையத்துக்கு வந்த சில விமானங்களால் அங்கு தரையிறங்க முடியவில்லை. அவை மும்பைக்கு அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
தாணே நகரில் மழை, வெள்ளத்தால் ஒரு பெண்ணும், சிறுமியும் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
மற்றொரு சம்பவத்தில் வணிக மையம் அருகே அமைக்கப்பட்டிருந்த மழைநீர் கால்வாய்க்குள் தவறி விழுந்த 14 வயது சிறுமி உயிரிழந்தார்.
மும்பை உள்பட மகாராஷ்டிரத்தின் மேற்குக் கடலோரப் பகுதிகளிலும், குஜராத், கோவா ஆகியவற்றின் சில பகுதிகளிலும் அடுத்த 24 முதல் 48 மணிநேரத்துக்கு மேலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பைத் தொடர்ந்து மும்பையில் பள்ளிகளும், கல்லூரிகளும் புதன்கிழமை மூடப்பட்டிருக்கும் என்று மகாராஷ்டிர கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்டே தெரிவித்தார்.
1997-ம் ஆண்டுக்குப் பிறகு மும்பையில் இப்போதுதான் அதிக அளவாக ஆகஸ்ட் மாதத்தில் 298 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதற்கு முன்பு 1997 ஆகஸ்ட் 23-ம் தேதி அதிக அளவாக 346.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.
கடந்த 2005-ம் ஆண்டு மும்பையில் பெய்த பெரு மழை மற்றும் வெள்ள பாதிப்பைப் போன்ற நிலை 12 ஆண்டுகளுக்குப் பின் தற்போது ஏற்பட்டுள்ளது.