அகிலேஷ் யாதவுக்கு எதிராக முலாயம் சிங் பேச்சு

Last Updated : Aug 16, 2016, 03:12 PM IST
அகிலேஷ் யாதவுக்கு எதிராக முலாயம் சிங் பேச்சு title=

உத்தரபிரதேசத்தின் அமைச்சரவையில் முலாயம் சிங் யாதவின் தம்பி சிவ்பால் யாதவ் மூத்த மந்திரியாக தற்போது இருக்கிறார். கடந்த சில மாதங்களாக முதல்-மந்திரி அகிலேசுக்கும், அவரது சித்தப்பாவான சிவ்பால் யாதவுக்கும் இடையே பல பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் தற்போது சமாஜ்வாடி கட்சியை கலகலக்கச் செய்துள்ளது.

சமீபத்தில் “குலாமி ஏக்தா தள்” என்ற கட்சியை சமாஜ்வாடி கட்சியுடன் இணைக்க முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் விரும்பினார். ஆனால் “குலாமி ஏக்தா தள்” கட்சியின் தலைவர் முக்தார் அன்சாரி மீது பல பெரிய வழக்குகள் இருப்பதால், அவரை சேர்த்தால் சமாஜ்வாடி கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று சிவ்பால் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அகிலேஷ் யாதவுக்கும், சிவ்பால் யாதவுக்கும் இடையே மோதல் முற்றியது.

இதையடுத்து அகிலேஷ் ஆதரவாளர்கள் சிவ்பால் யாதவை புறக்கணித்தனர். அதோடு அவர் மீது  ஊழல் குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தனர். இதனால் மன வேதனை அடைந்த சிவ்பால் யாதவ் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “சமாஜ்வாடி கட்சிக்குள் நடக்கும் செயல்கள் அதிருப்தி தருவதாக உள்ளன. இதே நிலை நீடித்தால் நான் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு, எதிர்க்கட்சி வரிசைக்கு சென்று அமர்ந்து விடுவேன்”என்று கூறியிருந்தார்.

இதை அறிந்ததும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தன் தம்பி சிவ் பால் யாதவை அழைத்து சமரசம் செய்தார். சிவ்பால் யாதவின்   ராஜினாமா முடிவை திரும்பப் பெறச் செய்தார். இந்த நிலையில் நேற்று சுதந்திர தின விழாவில் பங்கேற்ற முலாயம்சிங் யாதவ் வெளிப்படையாக தனது மகன் அகிலேசை கண்டித்து பேசினார். 

அவர் கூறியதாவது:-சிவ்பால் யாதவ் ராஜினாமா செய்தால் சமாஜ்வாடி கட்சிக்கு பெரும் அழிவு ஏற்படும். கட்சியில் உள்ள சில மந்திரிகள் அவருக்கு எதிராக சதி செய்கிறார்கள். இதை அகிலேஷ் யாதவ் புரிந்து கொள்ள வேண்டும். சிவ்பால் யாதவ் மிகவும் கடின உழைப்பாளி. சமாஜ்வாடி வளர்ச்சியில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் விலகினால் பாதி பேர் அவருடன் சென்று விடுவார்கள்.அகிலேஷ் மந்திரி சபையில் உள்ள சில மந்திரிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர். சட்ட விரோத செயல்கள் மூலம் சொத்து சேர்க்கிறார்கள். சில எம்.எல்.ஏ.க் களும் கூட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை எல்லாம் சமாஜ்வாடி கட்சியில் இருந்து விரட்ட வேண்டும். பொதுமக்கள் பாதிக்கப்பட அனுமதிக்கக் கூடாது. சிவ் பால் யாதவும் இதையேதான் கூறுகிறார். அவர் சொல் வதில் எந்த தவறும் இல்லை, என முலாயம்சிங் யாதவ் கூறினார்.

Trending News