கேரளாவில் இருந்து மாயமான 20 இளைஞர்களும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக உளவுத் துறை உறுதி செய்துள்ளது. அதேசமயம் அம்மாநிலத்தை சேர்ந்த மேலும் பல இளைஞர்கள் ஐஎஸ்ஸில் இணைந்திருக்க கூடும் என்ற தகவலும் வெளியாகி இருப்பதால் அச்சம் எழுந்துள்ளது.
கேரளாவின் காசர்கோடு, பாலக்காடு மாவட்டங்களில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற ஒரு தம்பதி உட்பட 20 இளைஞர்கள் திடீரென மாயமாகினர். ஒரு மாதத்துக்கும் மேலாக அவர்களது நிலை என்னவானது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் மாயமான இருவரின் பெற்றோர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் ஒரு குறுந்தகவல் வந்தது. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இந்த குறுந்தகவலை அரசின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
காசர்கோடு எம்.பி கருணாகரன் மற்றும் திருக்கரிப் பூர் எம்எல்ஏ எம்.ராஜகோபாலன் ஆகியோரிடம் பெற்றோர்கள் முறையிட்டனர். இவர்கள் மூலமாக இவ்விவகாரம், முதல்வர் பினராயி விஜயன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து மாயமான இளைஞர்கள் ஐஎஸ்ஸில் இணைந்துவிட்டார்களா என்பது குறித்து விரிவான விசாரணைக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் கேரள மாநில உளவுத் துறை விசாரணை நடத்தியதில் 20 பேரும் ஐஎஸ்ஸில் இணைந்திருப்பது ஊர்ஜிதமாகி உள்ளது. அவர்கள் அனுப்பிய வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இ-மெயில் தகவல்களை ஆராய்ந்ததில் அவை போலியான சமூக வலைதள முகவரியில் இருந்து கேரளாவில் உள்ள பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
மேலும் மாயமான 20 பேரில், 5 பேர் ஐஎஸ் அமைப்புடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் அம்பலமாகியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை மாநில போலீஸ் தலைவர் லோக்நாதா பெஹராவிடம் உளவுத் துறை வழங்கியுள்ளது.
மேலும் கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்து விடும் நிறுவனம் இயங்கி வரும் தகவலையும் மத்திய மற்றும் மாநில உளவுத் துறை முகமைகள் உறுதி செய்துள்ளன. ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் வலையில் கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் வெகு எளிதாக ஈர்க்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.