காஷ்மீர் என்பது சுயமரியாதை சம்பந்தப்பட்டது. மத்தியஸத்திற்கு இடமில்லை: ராஜ்நாத் உறுதி

காஷ்மீர் பிரச்சனை குறித்து பிரதமர் மோடி அதிபர் டிரம்பிடம் எதுவும் பேசவில்லை. என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 24, 2019, 02:45 PM IST
காஷ்மீர் என்பது சுயமரியாதை சம்பந்தப்பட்டது. மத்தியஸத்திற்கு இடமில்லை: ராஜ்நாத் உறுதி title=

புதுடெல்லி: காஷ்மீர் என்பது நமது சுயமரியாதை சம்பந்தப்பட்டது. இதில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மூன்றுநாள் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப், " காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யும்படியும், உதவ முன்வருமாறு பிரதமர் மோடி தம்மிடம் கேட்டுக் கொண்டதாகவும், தேவைப்பட்டால் இந்தியா - பாகிஸ்தான் இடையே சமரச பேச்சு நடத்த தாம் மத்தியஸ்தராக இருக்க விரும்புவதாகவும் டிரம்ப் கூறினார்.

ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்பின் யோசனையை இந்தியா நிராகரித்துள்ளது. பிரதமர் மோடி உதவும்படி கேட்டுக் கொண்டதாக டிரம்ப் கூறியதையும் இந்திய வெளியுறவுத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் நபர் தலையீட்டை இந்தியா கொள்கையளவில் விரும்பவில்லை என்ற நிலைப்பாட்டை அரசு மாற்றிக் கொண்டதா? என மத்திய அரசிடம் கேள்விகள் எழுப்பட்டு வருகிறது. மேலும் இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. 

இன்றும் இந்த விவகாரம் குறித்து இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்பினார்கள். பிரதர் மற்றும் டிரம்ப்க்கும் இடையேயான சந்திப்பில் என்னென்ன நடந்தது என்பதை மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இதுகுறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். ஆனால் பிரதமர் மோடி நேரில் பதிலளிக்க வேண்டும் எனக்கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அப்பொழுது அவர் கூறியது, அமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி சந்திப்பின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. காஷ்மீர் என்பது நமது சுயமரியாதை சம்பந்தப்பட்டது. இதில் மத்தியஸ்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. காஷ்மீர் விவாகரத்தில் 3வது நாடு மத்தியஸ்தம் என்ற கேள்விக்கே இடமில்லை. அப்படி செய்தால் அது சிம்லா ஒப்பந்தத்திற்கு எதிரானது ஆகும் எனக் கூறினார்.

Trending News