நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டு பிரச்சனைகளை தீர்க்க அவசர கால நடவடிக்கை அவசியம் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்!
மத்தியில் புதிய அரசு அமைந்த பின் நடக்கும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட பல மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஆகிய இருவர் மட்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி நாட்டில் நிலவும் வறுமை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி, வெள்ளம், மாசு, ஊழல் மற்றும் வன்முறை ஆகியவற்றிக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த வாழ்வாதாரம் அமைய வேண்டும். வரும் 2024-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்துவது என்பது சவாலான விஷயமாக இருக்கலாம். ஆனால் முடியாத காரியம் அல்ல. ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் திறனை அறிந்து மாவட்ட அளவில் இருந்து ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாட்டின் வருவாயை உயர்த்த மத்திய மாநில அரசுகள் இணைந்து ஏற்றுமதியை அதிகரிக்க பணியாற்ற வேண்டும் எனவும், மாநில அளவில் ஏற்றுமதி அதிகரித்தால் நாட்டின் வருவாய் மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் மனிதர்கள் வாழ குடிநீர் மிகவும் அவசியம். முறையான நீர் மேலாண்மையை செயல்படுத்தாத காரணத்தால் இன்று நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதன் தாக்கம் ஏழை எளிய மக்களை அதிகம் பாதிக்கிறது. வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக வேளாண் உற்பத்தி என்ற இலக்குடன் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துக்கொண்டார்.
அதேப்போல் வரும் 2022-ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதை நிறைவேற்ற மீன்வளம், கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, காய்கறி, பழங்கள் வளர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயத்திற்கு தேவையான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ள கார்ப்பரேட் முதலீடுகள், வலுவான தளவாடங்கள் மற்றும் போதுமான சந்தை ஆதரவு தேவை. உணவு உற்பத்தித்துறையை விட உணவு பதப்படுத்தும் துறை வேகமாக வளர வேண்டும்.
மக்களின் நம்பிக்கைக்கு உரிய அரசை உருவாக்க நிதி ஆயோக்கின் உறுப்பினர்கள் அனைவரும் முன்வர வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.