புது தில்லி / ராம்பூர்: இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பொழுது சில தலைவர்கள் மற்ற கட்சி தலைவர்களை கடுமையான வார்த்தைகளால் தாக்கப்படும் சம்பவம் அவ்வப்போது தேர்தல் களத்தில் நடத்து வருகிறது.
அந்தவகையில், சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் அஜம் கான், உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
ஏப்ரல் 5 ம் தேதி உ.பி.யின் ராம்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய அஜம் கான், யோகி ஆதித்யநாத் "கீழ் தரமான" நபர் எனக்கூறியுள்ளார். இதனையடுத்து அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை அசாம் கான் தெரிவித்தது முதல் முறையல்ல, அடிக்கடி சர்ச்சையாக பேசி ஆத்திரமூட்டும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
உத்தரபிரதேசத்தில் ராம்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சஞ்சய் கபூர் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி சார்பில் அஜம் கான் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.