மலப்புரம்: ராக்கிங் செய்த குற்றத்தால் மஞ்சேரியில் உள்ள மருத்துவக்கல்லூரி 21 மாணவர்களை இடைநீக்கம் செய்து உள்ளனர்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட மஞ்சேரி பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடம் சீனியர் மாணவர்கள் ராக்கிங்கில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
குறிப்பாக முதலாம் ஆண்டு மாணவர்களை வலுக்கட்டாயமாக நிர்வாணமாக நிற்க விடுவது, விடுதியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய வைப்பது, அசுத்தமான தண்ணீரை குடிக்க வைப்பது போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர்கள் 40 பேர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இந்த புகார் பற்றி குழுவினர் நடத்திய விசாரணையில், கல்லூரியில் ராக்கிங் கொடுமை நடப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் குழுவினர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் ராகிங்கில் ஈடுபட்ட 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் 21 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
முன்னதாக கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்ப கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவரிடம் சீனியர் மாணவர்கள் ராக்கிங்கில் ஈடுபட்டதில், அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.