சந்திரயான் 3 மூலம் டாப் கோடீஸ்வரரான இந்தியர்... யார் இந்த ரமேஷ் குன்ஹிகண்ணன்?

Forbes Billionaires List 2024 In Tamil: ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதன்முதலாக ரமேஷ் குன்ஹிகண்ணன் என்ற இந்தியர் இடம்பெற்றுள்ளார். இவரின் சுவாரஸ்ய பின்னணியை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 4, 2024, 07:30 PM IST
  • ரமேஷ் குன்ஹிகண்ணன் இந்த பட்டியலில் இடம்பெற முக்கிய காரணம் சந்திரயான் 3
  • ரமேஷ் குன்ஹிகண்ணனின் சொத்து மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
  • இந்த பட்டியலில் புதியதாக 25 இந்தியர்கள் சேர்ந்துள்ளனர்.
சந்திரயான் 3 மூலம் டாப் கோடீஸ்வரரான இந்தியர்... யார் இந்த ரமேஷ் குன்ஹிகண்ணன்? title=
Forbes Billionaires List 2024 In Tamil: உலகளவில் மிகவும் பிரபலமான பத்திரிகை ஃபோர்ப்ஸ் (Forbes). இந்த பத்திரிகை வருடாவருடம் உலகின் டாப் கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில், உலகின் டாப் 200 கோடீஸ்வரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல்தான் தற்போது உலகளவில் பேசுபொருளாகி உள்ளது. டாப் 200 கோடீஸ்வரர்கள் யார் யார், அதில் இந்தியர்கள் எத்தனை பேர் என்பதை அறிய நம் மக்களும் ஆர்வமாக இருக்கின்றனர். 
 
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட டாப் 200 கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 25 பேர் இந்தாண்டு புதியதாக இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்தாண்டு 169 பேர் மட்டுமே பெரும் கோடீஸ்வரர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்தாண்டு 200 பேராக அது உயர்ந்துள்ளது. அவர்களின் மொத்த சொத்தையும் சேர்த்தால் 954 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு வரும். இது கடந்தாண்டை விட 41% அதிகமாகும். கடந்தாண்டு இந்திய கோடீஸ்வரர்களின் சொத்தை மொத்தமாக சேர்த்தால் 675 பில்லியன் அமெரிக்க டாலர்தான் வந்தது. 
 
இந்தியாவில் யார் டாப்?
 
தற்போது மட்டும் உலகளவில் 2 ஆயிரத்து 781 பெரும் கோடீஸ்வரர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இதில் 141 பேர் அதிகமாகி உள்ளனர். 2021ஆம் ஆண்டுதான் இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், 2021ஆம் ஆண்டு எண்ணிக்கையை விட தற்போது 26 பேர் அதிகமாகி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இந்தியாவை பொறுத்தவரை ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவில் முன்னணியில் உள்ளார். அவர் மட்டுமே உலக கோடீஸ்வரர்களின் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளார், அதில் அவர் தற்போது 9ஆவது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு 116 பில்லியன் அமெரிக்க டாலராகும். தொடர்ந்து 84 பில்லியன் அமெரிக்க டாலருடன் கௌதம் அதானி, 36.9 பில்லியன் அமெரிக்க டாலருடன் சிவ் நாடார், 33.5 பில்லியன் உடன் சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினர், 26.7 பில்லின் அமெரிக்க டாலருடன் திலிப் சங்வி ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 
 
முதன்முதலாக கோடீஸ்வரர்கள் பட்டியலில்...
 
அந்த வகையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 2024ஆம் ஆண்டுக்கான உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இந்தியாவின் ரமேஷ் குன்ஹிகண்ணன் என்பவர் இம்முறை முதல்முதலாக இணைந்துள்ளார். எலான் மஸ்க், முகேஷ் அம்பானி, ஜெஃப் பெசாஸ் என பெரும் புள்ளிகள் உள்ள அந்த பட்டியலில் 60 வயதான ரமேஷ் குன்ஹிகண்ணன் இடம்பெற்றுள்ளார். அவரின் சொத்து மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டாலராக கணக்கிடப்பட்டுள்ளது. இவரது இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் சந்திரயான் 3 (Chandrayaan 3) என கூறப்படுகிறது. 
 
சந்திரயான் 3 என்ற இஸ்ரோ நிறுவனத்தின் நிலவு பயணம் என்பது கடந்தாண்டு ஆகஸ்ட் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. அதாவது, சந்திராயன் 3 விண்கலம் திட்டமிடப்பட்ட வகையில் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி அதன் சோதனையை மேற்கொண்டது. சந்திரயான் 3 விண்கலத்தின் மொத்த பட்ஜெட்டே 615 கோடி ரூபாயாகும். இதுவரை நிலவில் கால்பதித்த 5ஆவது நாடாகவும், தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாகவும் இந்தியா சந்திரயான் 3 விண்கலத்தால் பெருமை பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 
இது ஒருபுறம் இருக்க சந்திரயான் 3 மூலம் ரமேஷ் குன்ஹிகண்ணன் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்தது குறித்து இங்கு காணலாம். அதற்கு முன் அவர் யார், அவரின் பின்புலம் என்ன என்பதையும் இங்கு தெரிந்துகொள்ளலாம். 
 
யார் இந்த ரமேஷ் குன்ஹிகண்ணன்?
 
ரமேஷ் குன்ஹிகண்ணன் கர்நாடகாவின் மைசூர் நகரில் Kaynes Technology என்ற பெயரில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை உர்பத்தி செய்யும் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது அதன் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். இவர் மைசூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் என்ற பெரும் தனியார் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து இளங்கலை பட்டமும் பெற்றவர். இவர் 1988ஆம் ஆண்டு Kaynes Technology நிறுவனத்தை ஒப்பந்த ரீதியிலான தயாரிப்பு நிறுவமாக தொடங்கி தற்போது பெரிய நிறுவனமாக வளர்த்தெடுத்துள்ளார். இவரின் மனைவி சவிதா ரமேஷ் 1996ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த நிலையில், அவர் தற்போது இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ளார். 
 
இவருக்கும் சந்திரயான் 3 வெற்றிக்கு பெரிய பங்கு இருக்கிறது. இவரின் தரமான எலக்ட்ரானிக்ஸ் அமைப்புகளை கொண்ட சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு இவரின்  Kaynes Technology நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் கணிசமாக அதிகரித்தன. இவருக்கு அதில் 64% பங்குகள் உள்ளன. குறிப்பாக, 2022இல் இருந்து Kaynes Technology பங்குச்சந்தையில் பட்டியலானதில் இருந்து, அதன் பங்குகளின் மதிப்பு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. 
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News